ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி; ஒவ்வாமையுடன் ஏற்கிறோம்: திருமாவளவன்

By செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி என்கிற முடிவை, ஒவ்வாமையுடன் ஏற்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று (ஏப். 26) வெளியிட்ட அறிக்கை:

"ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுவரை அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டுவதில் பின்பற்றப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டும் கூட்டி இருப்பது ஏனென்று விளங்கவில்லை.

கரோனா காரணமாகத் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றால், இணைய வழியாகவே இந்தக் கூட்டத்தை அரசு நடத்தி இருக்கலாம். தமிழக அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலையில் 'ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்' என்று எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு நெருடலாகவும் உறுத்தலாகவும் உள்ளது.

எனினும், அனைத்துக் கட்சிகளின் முடிவு என்கிற வகையில் அம்முடிவுக்கு உடன்படுகிற அதே வேளையில் வேறுசில கருத்துகளை அரசின் கவனத்துக்கு முன்வைக்கிறோம்

கடந்த 15 ஆம் தேதி இந்தியாவில் உள்ள ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் தேவை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் 7,127 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தினம் தயாரிக்கப்படுவதாகவும், தற்போது அதில் 54 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஸ்டாக் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. போதுமான ஆக்சிஜன் இருக்கிறது என்றும்; 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஸ்டாக் உள்ளது என்றும் தெரிவித்த மத்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அந்த நிர்வாகம் வழக்கு தொடுத்தபோது அதற்கு அனுமதி தரவேண்டும் என்பதற்காக ஆக்சிஜன் பற்றாக்குறையைக் காரணம் காட்டுவது முரண்பாடாக உள்ளது.

மத்திய அரசு தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவையைக் குறைத்து மதிப்பிட்டு இருப்பதாகவும், தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை நாள் ஒன்றுக்கு 450 மெட்ரிக் டன் அளவுக்கு உயரக்கூடுமென்றும் தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டின் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 400 மெட்ரிக் டன் தான் என்றும், இந்நிலையில் 80 மெட்ரிக் டன்னை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து அனுப்புவது சரியல்ல என்றும் முதல்வர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அதிகரித்துவரும் ஆக்சிஜன் தேவையை நிறைவேற்ற என்ன நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கிறது? ஒவ்வொரு மருத்துவமனையிலும் பிஎஸ்ஏ (Pressure Swing Absorption oxygen generator) ஆக்சிஜன் ஜெனரேட்டர் வசதியின் மூலமாக வெறும் ஒன்றேகால் கோடி ரூபாயிலேயே சுமார் ஒரு மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் கொண்ட கட்டமைப்புகளை உருவாக்கலாம் என்றும் அதற்கென மத்திய அரசு 201 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 162 கட்டமைப்புகளை உருவாக்குவதாகவும் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

அதில் எத்தனை கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கின்றன? தமிழக அரசு ஏன் அத்தகைய கட்டமைப்புகளை இங்கே உருவாக்கவில்லை? என்பதைத் தமிழக முதல்வர் விளக்க வேண்டும்.

மத்திய அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் தடுப்பூசி பற்றாக்குறை செயற்கையாக உருவாக்கப்பட்டு இப்போது தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தம் விருப்பம்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.

அதுபோலவே, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்தும் சரியாக திட்டமிடாமல் ஒரு செயற்கையான பற்றாக்குறையை நாட்டு மக்கள் மீது திணித்து, அதைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு திட்டமிடுகிறார்களோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் 'இக்கட்டான நேரத்தில் இலவசமாக ஆக்சிஜனை கொடுத்தோம், பேரிடர் காலத்தில் உதவினோம்' என்பதைக் காரணம் காட்டி நாளைக்கு இந்த ஆலையை நிரந்தரமாகத் திறப்பதற்கு அனுமதி கோரலாம்.

அவ்வாறு கேட்டால் அதை நீதிமன்றம்கூட பரிசீலிக்கக்கூடிய சூழல் உருவாகும். இதையெல்லாம் தமிழக அரசு கவனத்தில் கொண்டதா என்பது தெரியவில்லை.

பொதுமக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முரணான முடிவுக்கு ஒவ்வாமையுடன் ஏற்கும் அதே வேளையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திறக்கப்படுவதற்கு இது வழிவகுத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்; அதை நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்