ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைத் தற்காலிக ஏற்பாடாக அனுமதிக்கலாம்: காங்கிரஸ்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியையும் விநியோகத்தையும் கண்காணிக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காலத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் அவசரத் தேவையின் காரணமாக, ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க இன்று (ஏப்.26) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு பேசியதாவது:

"ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, மீண்டும் ஆலையைத் திறக்க அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளன.

இந்நிலையில், கரோனா இரண்டாவது அலையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் சூழலில், தாங்களே ஆக்சிஜனைத் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் நிர்வாகம் அணுகியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி அளிப்பதில் என்ன தவறு என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே, கரோனா தொற்று கோரத் தாண்டவம் ஆடுகிற இந்நிலையில், மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பின் காரணமாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைத் தற்காலிக ஏற்பாடாக அனுமதிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து, ஆக்சிஜன் உற்பத்தியையும் விநியோகத்தையும் கண்காணிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது அனுமதிக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தியைத் தவிர வேறு எந்தவிதமான நடவடிக்கையையும் அனுமதிக்கக் கூடாது".

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE