முழு ஊரடங்கு அமல்: வெறிச்சோடியது துறைமுக நகரம்; கடைகள் அடைப்பு, வாகனங்கள் இயங்கவில்லை

By ரெ.ஜாய்சன்

முழுநேர ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து, ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு காரணமாக நேற்று இரவு 10 மணி முதல் இந்த ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளை காலை 4 மணி வரை நீடிக்கிறது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட தலைநகரமான தூத்துக்குடியில் உள்ள வஉசி சந்தை, காய்கறி சந்தை ஆகிய இரு பிரதான சந்தைகள் உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் நேற்று மூடப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. தேனீர் கடைகள் கூட திறக்கப்படவில்லை. ஆங்காங்கே சில மருந்துக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. காலையில் சில பகுதிகளில் பால் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி, வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் இயங்கவில்லை. அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் மட்டும் ஒன்றிரண்டு ஆங்காங்கே இயங்கின. இதனால் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை, டபிள்யூஜிசி சாலை, விஇ சாலை, எட்டயபுரம் சாலை, திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சிலர் வெளியே வந்தனர். தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள், இருச்சக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்ததுடன், அபராதமும் விதித்தனர்.

மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமான திருச்செந்தூர் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று முகூர்த்த தினம் என்பதால் பலர் ஏற்கனவே திருச்செந்தூரில் திருமணம் நடத்த திட்டமிருந்திருந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர் அல்லது தங்களது ஊர்களிலேயே எளிமையாக நடத்திக் கொண்டனர்.

சிலர் மட்டும் திருச்செந்தூர் வந்து அங்குள்ள தூண்டுகை விநாயகர் கோயில் முன்பு திருமணம் செய்து கொண்டனர். மணமக்கள் மற்றும் ஒன்றிரண்டு பேர் மட்டுமே பங்கேற்று திருமணத்தை முடித்துக் கொண்டனர். இவ்வாறு நேற்று சுமார் 10 திருமணங்கள் தூண்டுகை விநாயகர் கோயில் முன்பு நடந்தன. இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே மீன்பிடித் தடைக்காலத்தில் உள்ள நிலையில் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதுபோல உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் நேற்று பணிகளுக்கு செல்லவில்லை. அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டும் இயங்கின.

பொதுமக்கள் ஊரடங்கை கடைபிடிப்பதை கண்காணிக்க தூத்துக்குடி மாநகரில் 30 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 130 இடங்களில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்