புதுச்சேரியில் இரண்டாவது நாளாக தொடரும் முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்  

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு தொடர்ந்த நிலையில், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. தேவைக்கேற்ப ஒரு சில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று மேலும் அதிகரிக்க தொடங்கியதால், வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 வரை என 55 மணி நேரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதர நாட்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பகல் 2 வரை மட்டுமே இயங்கும். இது நாளை முதல் நடைமுறைக்கு வரும். பகல் 2 மணிக்குப் பிறகு உணவு விடுதிகளில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 55 மணி நேர முழு ஊரடங்கு தொடங்கியது. தொடர்ந்து நேற்று (ஏப். 24 ) முழு ஊரடங்கு அமலில் இருந்தது. புதுச்சேரி நகர மற்றும் கிராமப்பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தது. காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருந்தன.

பெரிய மார்க்கெட் காய்கறி கடைகள், மீன் மார்க்கெட் வழக்கம் போல் இயங்கின. அத்தியாவசிய கடைகள் திறந்திருந்தாலும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பிஆர்டிசி மற்றும் தமிழக அரசு பேருந்துகள், சில தனியார் பேருந்துகள் மட்டும் இயங்கின. பேருந்துகளில் குறைந்த பயணிகளே பயணம் செய்தனர்.

தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பூங்காக்கள், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. தேவையின்றி வெளியே சுற்றியவர்களைப் பிடித்து காவல்துறையினர் அபராதம் விதித்ததோடு, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று( ஏப். 25) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. தேவைக்கேற்ப ஒருசில பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தன. இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு சென்றவர்கள் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவசர தேவைக்குச் சென்வர்கள் மட்டும் முறையான விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதுபோல் புதுச்சேரிக்கு தமிழகப் பேருந்துகள் இயக்கப்படாததால் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. ஆங்காங்கே நின்றபடி ஒலிபெருக்கி மூலம் கரோனா மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்து போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபடி இருந்தனர். தேவையின்றி சுற்றியவர்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டது.

நாளை (திங்கள்கிழமை) முதல் வர்த்தக நிறுவனங்கள், கடைகளைத் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, பழக்கடைகள், பால் பூத்துகள், மருந்து விற்பனைக் கடைகள் தவிர பிற வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். அதேபோல் மதுபானக் கடைகளும் பகுதி நேரமே திறந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்