கரோனா நெருக்கடி காலத்தில் மக்களுக்கான தேவையைக் கணக்கிற்கொண்டு திட்டமிட்டுப் பணியாற்றியதால் இன்று இரண்டாவது அலையை எதிர்கொள்ளத் தேவையான ஆக்சிஜனுக்கான கொள்கலன் மதுரையில் உள்ளது. இதற்காக நன்றி சொல்லிக்கொள்ள நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் அப்படி உங்களுக்கு யாராவது இருக்கிறார்களா என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கு மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கடந்த ஆண்டு கரோனாவின் முதல் அலையின்போது நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம். மதுரை மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர், மாவட்டச் சிறப்பு அதிகாரி என்று அனைவருடனும் நாள்தோறும் பேசி, முரண்பட்டு, கோபப்பட்டு இரவுபகலாக அதே சிந்தனையோடு பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
மதுரையில் நோய்ப்பரவலின் வேகம் கூடுதலாகத் தொடங்கியதும் எங்களின் வேகமும் கூடுதலானது. மாவட்டச் சிறப்பு அதிகாரியின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என்று அரசுத் தலைமைச் செயலரிடம் நான் முறையிட்டேன். என்னுடைய வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக புதிய அதிகாரியை நியமித்து உத்தரவிட்டார்.
டாக்டர் சந்திரமோகன் இ.ஆ.ப. புதிய அதிகாரியாக நியமிக்கபட்ட செய்தி வந்ததும் உடனடியாக அவருடன் தொலைபேசியில் பேசினேன். அவரும் மறுநாளே மதுரைக்கு வந்துசேர்ந்தார். விருந்தினர் மாளிகையில் சந்தித்து மதுரைக்குச் செய்யவேண்டியதென்ன என்ற நீண்ட பட்டியலை அவரிடம் தந்தேன். அவரும் உடனடியாகப் பணியினைத் தொடங்கினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் 6000 லிட்டர் திரவ ஆக்சிஜனுக்கான கொள்கலன் மட்டுமே இருந்தது. அதன் மூலம் 400 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை உடனடியாக அதிகப்படுத்துவது முதற்பணியாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினோம்.
சிறப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகனும் அன்றைய மதுரை ஆட்சியர் டாக்டர் வினய்யும் அதன் முக்கியத்துவத்தை முழுவதுமாக உணர்ந்து உடனடியாகச் செயலில் இறங்கினர். சென்னையிலிருந்து வாங்கவேண்டிய அனுமதியைப்பெற எல்லோரும் அவரவர்கள் பாணியில் முயற்சித்தோம். வேலைகள் படுவேகமாக நடந்தன.
அதன் விளைவாக கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலிருந்த 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலன் 20000 ஆயிரம் லிட்டர் கொள்கலனாக மாற்றப்பட்டது. 400 படுக்கைகளுக்கு மட்டும் கொடுப்பட்டிருந்த இணைப்பு கூடுதலாக 700 படுக்கைகளுக்குத் தரப்பட்டு மொத்தம் 1100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்பட்டது.
அதுவரை தோப்பூர் அரசுமருத்துவமனைக்கு சிலிண்டர் மூலம் 30 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் தரும் வசதி இருந்தது. ஆனால் அதன் பிறகு புதிய கொள்கலன் அங்கு நிறுவப்பட்டு 130 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதியாக அது மாற்றப்பட்டது.
இந்தச் செயல்கள் எல்லாம் எளிதில் நடந்து விடவில்லை. அப்பொழுது முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. அந்த நேரத்தில் பெங்களூர், பாண்டிச்சேரி, ஆகிய இடங்களிலிருந்து பொருள்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணியாளர்களையும் பேசி வரவைத்து வேலையை விரைவுபடுத்துவதில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்ட டாக்டர் சந்திரமோகனுக்கும் அன்றைய ஆட்சியர் டாக்டர் வினய்க்கும் இந்த நேரத்தில் மதுரை மக்களின் சார்பில் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பொழுது நாடே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் போது எங்களால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதற்குக் காரணம், முதல் அலையின் போது எடுத்துக்கொண்ட சிறப்பு நடவடிக்கையும் அதற்காக உழைத்த மனிதர்களுந்தான். இப்பணிகளுக்கு பக்கபலமாக இருந்த மதுரை மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்குமணி, தோப்பூர் மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் காந்திமதிநாதன் ஆகியோருக்கும் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி.
இந்த நேரத்தில் இந்திய ஒன்றிய அரசின் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு நான் எழுப்பும் கேள்வி, கடந்த ஆண்டு வந்த கரோனாவின் முதல் அலையைத் தொடர்ந்து, 30 லட்சம் மக்கள்தொகை இருக்கும் மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் கொள்கலன் அளவினை சுமார் நான்கு மடங்கு உயர்த்தியிருக்கிறோம்.
நாங்கள் யாரிடமும் பிச்சையெடுக்கவில்லை, திருடவில்லை, வேறெதுவும் செய்யவில்லை. மக்களுக்கான தேவையைக் கணக்கிற்கொண்டு திட்டமிட்டுப் பணியாற்றினோம்.
எனவே, மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அதற்காகப் பணியாற்றியவர்களுக்குக் கம்பீரத்தோடு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அப்படி நன்றிசொல்ல உங்களுக்கு யாராவது இருக்கிறார்களா அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களே?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago