மண் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு; ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

முறைகேடாக மண் திருடி கடத்தும் நபரிடம் இருந்து லஞ்சமாக சொகுசு கார் வாங்கிய புகாரில் முன்னாள் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியரும், தற்போது ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளராக உள்ள முருகேசன் உட்பட 19 பேர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை சார் ஆட்சியராக இருப்பவர் இளம்பகவத். இவருக்கு, கடந்த 25-03-2019-ல் வரப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் சோளிங்கர் அருகேயுள்ள புலிவலம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தும் கும்பலை பிடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, சரவணன் என்பவர் தலைமையில் ஒரு கும்பல் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 2 டிப்பர் லாரிகளில் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். அதிகாரிகளைப் பார்த்தும் அவர்கள் தப்பிய நிலையில், ஒரே ஒரு டிப்பர் லாரியின் ஓட்டுநர் கிருஷ்ணன் என்பவர் மட்டும் வருவாய்த் துறையினரிடம் சிக்கினார்.

இதையடுத்து, ஒரு பொக்லைன் இயந்திரம், 2 டிப்பர் லாரி, வாகனங்களின் உரிமையாளர் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக புலிவலம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் டிப்பர் லாரி ஓட்டுநர் கிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையில், மண் கடத்தல் கும்பலின் முக்கிய நபரான சரவணன் என்பவர் தப்பியோடும்போது, அவரது இரண்டு செல்போன்கள் துணை ஆட்சியர் இளம்பகவத் வசம் சிக்கியது. அந்த செல்போனில் இருந்த அழைப்புகள் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்தபோது சரவணனுக்கு, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சரவணனின் இரண்டு செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு துணைஆட்சியர் இளம்பகவத் அறிக்கை அனுப்பினார். அதன்பேரில், வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் விசாரணை நடத்தி வந்தார். அதில், சரவணனின் செல்போன் எண்களில் இருந்து கடந்த 01-08-2018 -லிருந்து 25-03-2019 வரையிலான கால கட்டத்தில் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தனர். அதில், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்து, தற்போது ஈரோடு மாவட்டத்தில் ஆவின் பொது மேலாளராக உள்ள முருகேசனுடன் நேரடி தொடர்பில் தொடர்ந்து இருந்ததுடன் இருவருக்கும் இடையில் பணப் பரிமாற்றம் இருந்ததற்கான வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் முழுமையாக கிடைத்தது.

மேலும், முருகேசன் அவரது மனைவி அரசானி என்பவரது பெயரில் ரூ.23 லட்சம் மதிப்பிலான இன்னோவா கார் வாங்கியதற்கான முழு பணத்தையும் சரவணன் செலுத்தியதற்கான வாட்ஸ்-அப் பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

அதேபோல், அப்போது வாலாஜா பிர்கா வருவாய் அலுவலராக இருந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக உள்ள கன்னியப்பன், பாண்டியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், தற்போது அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலராக உள்ள வெங்கடேசன், முன்னாள் வாலாஜா வட்ட மண்டல துணை வட்டாட்சியர் மதி, சோளிங்கர் காவல் ஆய்வாளராக இருந்த எம்.வெங்கடேசன், சோளிங்கர் உதவி ஆய்வாளராக இருந்த மகாராஜன், பாஸ்கரன், கொண்டபாளையம் காவல் நிலைய காவலர் விஜய பாஸ்கர், கொண்டபாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், சோளிங்கர் தனிப்பிரிவு தலைமை காவலர் பச்சையப்பன், தலைமை காவலர் விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், பூபதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயகுமார், காவலர்கள் ராஜ்கமல், சக்திவேல் ஆகியோருடன் சரவணன் நேரடி தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து, முறைகேடாக இயங்கிய மண் குவாரிக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், ஈரோடு ஆவின் பொதுமேலாளர் முருகேசன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன், மற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் 4 பேரும், மண் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியான சரவணன் மற்றும் காவல் துறையினர் 13 பேர் என மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்