வாக்கு எண்ணிக்கை வீடியோவாக பதிவு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, காரைப்பேட்டை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 134 மேற்பார்வையாளர்கள், 134 உதவியாளர்கள், 134 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சி வகுப்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பங்கேற்றனர். தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேசியதாவது:

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடஉள்ள அலுவலர்களுக்கான மேஜை, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல, எந்த மேஜையில், எந்தமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட வேண்டும் என்பதும் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்ப்படும்.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்கள் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வர வேண்டும். அங்குஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண் பார்வையாளர் பணியில் ஈடுபடுவர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு, அங்கிருந்து வாக்குகள் எண்ணப்படும் மேஜைக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்படும். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்படும்.

வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை, தமக்கு ஒதுக்கப்பட்ட மேஜையைத் தவிர்த்து வேறெங்கும் செல்லக் கூடாது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை இரண்டு பிரதிகள் தயாரித்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் அதன் பிரதியை, வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

இந்தப் பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.நாராயணன், ஏ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE