அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மறு ஆய்வு செய்வதற்காக 2009ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படுமா, இல்லையா? எனத் திட்டவட்டமாக தெரிவிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009-ம் ஆண்டில் தமிழக அரசு, மாநில அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதியம் தொடர்பாக 354/2009 என்ற எண் கொண்ட விரிவான அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில் மருத்துவர்களுக்கான பதவி உயர்வு, பணி நியமனம், ஊதியம், தானாக முன்வந்து பதவி விலகுவதற்கான வழிமுறைகள் ஆகியவை விரிவாக வகுக்கப்பட்டன.
இதில் ஊதியம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டுசென்றும் போராட்டம் நடத்தியும் அரசு அசையவில்லை.
இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “அரசு மருத்துவராகச் சேர்ந்தவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில் 2009ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படாததால், அது அரசு மருத்துவர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கில் அரசின் நிலைப்பாட்டை 5 நாட்களில் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசின் நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “2009ஆம் ஆண்டு அரசாணையை அமல்படுத்தக் கோரி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி மனு கொடுத்தும் 6 மாதங்களாகக் கிடப்பில் போட்டுள்ளதால், வழக்குத் தொடர்ந்தோம்.
அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க கடந்த முறை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு மௌனம் காக்கிறது. 2009ஆம் ஆண்டு முதல், மூன்று முறை வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அரசின் முடிவை எழுத்துபூர்வமாகவோ அல்லது உத்தரவாகவோ அரசு வெளியிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது சம்பந்தமாக எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, 2009ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படுமா, இல்லையா? என்பதை ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago