தமிழகத்தில் மின்வெட்டு அறவே இருக்காது என்ற தமிழக முதல்வர் கூறியது காற்றில் பறந்த வாக்குறுதி ஆகிவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், "முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி,"நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்" என செய்யாத சாதனைக்காக தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு" என்ற பழமொழியை விட விரைவாக இரண்டு நாட்களிலேயே தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது. ஜூன் மாதத்தின் முதல் இரு நாட்கள் மட்டும் மின்வெட்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூன் 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. சென்னை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் 4 முதல் 6 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 100 டிகிரிக்கும் அதிகமாக கோடை வெயில் கொளுத்தும் வேளையில் இந்த மின்வெட்டால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் உற்பத்தி தடை பட்டிருக்கிறது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், உயர்வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வகப் பணிகளும் மின்வெட்டால் முடங்கியுள்ளன.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மின்வெட்டு போக்கப்படும் என்று தான் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அதன்பின் பத்துக்கும் மேற்பட்ட முறை இதே வாக்குறுதியை மீண்டும் மீண்டும் கூறிய போதிலும், மின்வெட்டு அதிகரித்ததே தவிர குறையவில்லை. இப்போது காற்றாலைகள் மின்னுற்பத்தியைத் தொடங்கியிருப்பதால் அதைக் கொண்டு நிலைமையை சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது என அறிவித்ததுடன், அதை தமது சாதனையாகவும் காட்ட முதலமைச்சர் முயற்சி செய்திருக்கிறார். அதிலும், 3 ஆண்டுகளில் மின்வெட்டைப் போக்குவதாக அவர் உறுதியளித்திருந்ததைப் போலவும், அதை இப்போது செய்து காட்டியதன் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். மின்வெட்டு எப்போது நீங்கும் என்பது தொடர்பாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பலமுறை வாய்தா வாங்கியதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் இப்படி ஓர் அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசின் மின் திட்டங்களையும் சேர்த்து தமிழகத்தின் நிறுவு திறன் 10,364 மெகாவாட்டாகவும், உற்பத்தி 8000 மெகாவாட்டாகவும் இருந்தது. அதன்பின் முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டங்களும், கூட்டு முயற்சி மின்திட்டங்களும் நிறைவடைந்ததால் நிறுவுதிறன் 12,814 மெகாவாட் ஆகவும், உற்பத்தி 10,300 மெகாவாட் ஆகவும் அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் மின்தேவை 14,000 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவும் நிலையில், அதை காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு சமாளித்துவிடலாம் என்று நினைப்பது மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயல்வதற்கு ஒப்பாகும். நிலையாக மின்சாரம் வழங்கும் அனல் மின் நிலையங்களை அமைப்பதன் மூலம் தான் மின்வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறியதால் தான் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழகத்தின் மின்தேவை 2015 ஆம் ஆண்டில் 15,120 மெகாவாட் ஆகவும், 2016ல்16,400 மெகாவாட் ஆகவும், 2017ல் 17,750 மெகாவாட் ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை புதிய மின்திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாததாலும், தற்போது ஒப்பந்தம் வழங்கப்படவுள்ள 3300 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி மற்றும் எண்ணூர் அனல் மின்திட்டப் பணிகள் 2017 ஆம் ஆண்டு வரை நிறைவடையாது என்பதாலும், அதுவரை மின்வெட்டு அதிகரிக்குமே தவிர குறையாது.
எனவே, தவறான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதற்கு முயலாமல், மின்வெட்டைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் ஒருகட்டமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள மின்திட்டங்களை விரைவாக, அதாவது 30 மாதங்களில், நிறைவேற்றி முடித்து மின்வெட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண தமிழக அரசு முயல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago