தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், திருச்சி மாநகரில் உள்ள மீன் மற்றும் காய்கனி மார்க்கெட்டுகளில் இன்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மக்கள் குவிந்தனர். இவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்.20-ம் தேதி முதல் ஏப்.30-ம் தேதி வரை இரவு நேரப் பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி, முழு நேர ஊரடங்கு நாளை வரவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று 320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2,792 ஆக உள்ளது. இதில், 2,225 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள நிலையில், 567 பேர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசின் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை அனைத்துத் தரப்பினரும் பின்பற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருவதுடன், பின்பற்றாதவர்கள் மீது தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதன்படி, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோர், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து மாநகராட்சி மற்றும் போலீஸார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை முழு நேரப் பொது ஊரடங்கு வரவுள்ள நிலையில், காய்கனிகள், இறைச்சி, மீன், பொருட்கள் வாங்க இன்று அதிகாலை முதலே மக்கள் மார்க்கெட்டுகளில் குவிந்தனர்.
குறிப்பாக, அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட காந்தி மார்க்கெட், கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்குட்பட்ட உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் கரோனா பரவல் அச்சம் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இறைச்சி, மளிகை, மீன், காய்கனி, பூ, பழம் என அனைத்துக் கடைகளிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருட்கள் வாங்குவதிலேயே மக்கள் ஆர்வம் காட்டினர். இதில், பலரும் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.
இரு மார்க்கெட்டுகளிலும் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். மேலும், மார்க்கெட்டுக்குள் நுழைந்த பிறகு முகக்கவசத்தை அகற்றியவர்களைக் கண்காணித்து முகக்கவசத்தை அணியுமாறும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் தொடர்ந்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர்.
அதையும் மீறி முகக்கவசம் அணியாமல் இருந்தவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்தனர். மக்களின் அலட்சியம் காரணமாக கரோனா அதிக அளவில் பரவும் அபாயம் உள்ளதாகவும், உரிய நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர்கள் சுப.கமலக்கண்ணன் (அரியமங்கலம்), ஆர்.வினோத் (கோ-அபிஷேகபுரம்) ஆகியோர் கூறும்போது, ''கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மார்க்கெட்டுகளில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. காசிவிளங்கி மீன் சந்தையில் இன்று காலை மட்டும் ரூ.6,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காந்தி மார்க்கெட்டிலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். ஆனால், பலரும் கரோனா குறித்த அச்சம் இல்லாமல் சுற்றுவது வேதனைக்குரியது. குடும்பத்தினரையும், சமூகத்தையும் எண்ணி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago