ஸ்டெர்லைட் ஆலையை அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாமே: உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

2018 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்க அரசு விரும்பவில்லை, ஸ்டெர்லைட் ஆலையை எந்த வகையிலும் மீண்டும் திறக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடெங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில் தங்களை அனுமதித்தால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து தருவதாக வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சித்தலைவர்கள் நாட்டில் நிலவும் கரோனா இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி வேதாந்தா நிறுவனம் மீண்டும் உள்ளே நுழைய முயல்கிறது இந்த சூழ்ச்சியில் சிக்க யாரும் தயாராக இல்லை என்று அறிக்கை விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் கடுமையான எதிர்ப்பலை கிளம்பியது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கை எதிர்க்கொள்ளும் முன் தமிழக அரசு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டியது. இதிலும் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலை வரக்கூடாது என தெரிவித்தனர்.அரசே ஸ்டெர்லைட் ஆலையை ஏற்று நடத்தினால் சரியாக இருக்குமா? என ஆட்சியர் கேள்விக்கு நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தனது தரப்பு வாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதை எதிர்த்தது. வேதாந்தா நிறுவனத்தின் ஆக்சிஜன் தயாரிப்பு கலனை திறப்பதற்கு பதிலாக நாடு முழுவதிலும் உள்ள மற்ற ஆலைகளில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மத்திய அரசு கவனம் செலுத்தலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.

மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தில், ”நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை தற்போது அதிகரித்துள்ளது, எனவே இந்த விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜன் தயாரிக்கட்டும் அல்லது தமிழக அரசே ஆலையை கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கட்டும், மொத்தத்தில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோன்சால்வேஸ் தனது வாதத்தில், “ கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, ஆனால் ஆலையை திறப்பதில் அப்பகுதி மக்களுக்கு கடும் ஆட்சேபனை உள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “பின்னர் ஏன் 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யவில்லை? ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை”. என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு அரசு தரப்பு வழக்கறிஞர், “ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், ஆலையை மீண்டும் திறக்க கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் இன்றைய தினம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இந்த எதிர்ப்பை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை நீதிமன்றத்தில் நாங்கள் வழங்குகிறோம்.

ஆலையை நாங்களே திறக்கலாம் என்றாலும்கூட அந்த பகுதியில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கின்றது. மக்கள் இன்னும் ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக நம்பவில்லை. 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று மற்றொரு அசம்பாவித சம்பவம் நடப்பதையும் தமிழக அரசு விரும்பவில்லை”. எனத் தெரிவிக்கப்பட்டது

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தற்போதைய சூழலில் ஆக்சிஜன் அவசியம் தேவை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை அல்ல எந்த ஆலையாக இருந்தாலும் அதன் கட்டமைப்பை பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு,

மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ள நேரத்தில் ஆலை பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக அரசு கூறுகிறது என்றால் அந்த நிறுவன விவகாரத்தை ஒதுக்கி விடலாம்

ஆனால் வேதாந்தா நிறுவனத்துடன் பிரச்சனை இருப்பதால், ஆக்சிஜன் தயாரிப்புக்கு எதிர்க்கிறீர்கள் என்றால் ? இது என்ன வகையிலான வாதம், ஆக்சிஜன் தயாரிப்பில் நீங்கள் உங்கள் கடைமையை செய்ய ஏன் மறுக்கிறீர்கள்?” எனக்கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோன்சால்வேஸ் வாதத்தில், “தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, மேலும் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் இருப்பு உள்ளது என தமிழக அரசு தலைமை வழக்கறிஞரே நேற்று கூறியுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்”. என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தற்போது இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் உங்கள் மாநிலத்தின் தேவைக்கு ஆக்சிஜன் இருப்பு அதிகமாக இருக்கிறது என்பதால் ஆக்சிஜன் தயாரிக்க மாட்டோம் என கூறுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்