ஊரடங்கால் உருக்குலைந்த மலர் சாகுபடி: தொழில் செய்ய முடியாததால் நீலகிரி மலர் சாகுபடியாளர்கள் விரக்தி

By ஆர்.டி.சிவசங்கர்


கரோனா ஊரடங்கால் தொழிலே முடங்கி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் நீலகிரி மாவட்ட மலர் சாகுபடியாளர்கள். வங்கி கடன் மற்றும் அரசின் உதவியும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், மலர் சாகுபடியில் ஈடுபட்டு உள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும், 3,000 தொழிலாளர்கள் உள்ளனர். இங்கிருந்து மொட்டுகளாக அறுவடை செய்யும் கொய்மலர்கள், பெங்களூரு, கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மலர் சாகுபடியே முடங்கி விட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்ட கொய்மலர் உற்பத்தியாளர்கள் கூறும் போது, "பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமை குடில்கள் அமைத்து, சாகுபடி செய்யப்பட்டு வந்த கொய்மலர்கள், ஊரடங்கு உத்தரவுக்கு பின், ரூ.20 கோடி மதிப்பிலான கொய்மலர்கள் சந்தைக்கு அனுப்ப முடியாமல் வீணாகின. இதனால், பல லட்சம் மதிப்பில் பூக்கள் அழுகி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது" என்றனர்.

இந்நிலையில், தற்போது மீண்டும் கரோனா இரண்டாம் அலை காரணமாக அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் ஊரடங்கும், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், விழாக்கள் மற்றும் சுப காரியங்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலர்களை வாங்க ஆளில்லாமல், அறுவடை செய்யப்பட்ட மலர்கள் மண்ணுக்கே உரமாகி வருகின்றன.

கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து மலர் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், வங்கி கடன் மற்றும் அரசின் சலுகைகள் இல்லாததால், பல மலர் சாகுபடியாளர்கள் தொழிலை கைவிட்டு விட்டனர் என்கிறார் கார்னேசன் மலர் நாற்றுகள் உற்பத்தியாளர் புவனேஷ்.

அவர் கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தில் 50 ஏக்கரில் 200 விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வந்தனர். பசுமை குடில் அமைத்தல், மலர் சாகுபடி செய்ய உபகரணங்கள் என ஒரு ஏக்கருக்கு ரூ.60 முதல் ரூ.65 லட்சம் செலவாகும்.

கார்னேசன் செடியில் 6 மாதங்களுக்கு பின்னரே மலர்களை சாகுபடி செய்யலாம். ஒரு செடியிலிருந்து 2 ஆண்டுகள் மலர்களை சாகுபடி செய்யலாம். ஒரு நாற்றுக்கு 12 மலர்கள் சாகுபடி செய்யலாம்.

கடந்தாண்டு முதல் ஆறு மாதங்கள் கரோனாவால் பூக்கள் விற்பனையாகவில்லை. அவை வீணாகி விட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் ஆண்டின் பிற்பகுதியில் ஓரளவுக்கு மலர்கள் விற்பனையாகின.

இந்நிலையில், இந்தாண்டு மீண்டும் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மலர் ஏற்றுமதியாளர்கள் எங்களிடமிருந்து மலர்களை கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டனர். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சந்தை பெங்களுரூ. கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெங்களுரூவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், மலர்களே வேண்டாம் என கூறி விட்டனர்.

நாள் ஒன்றுக்கு 50 பெட்டிகள் மலர்கள் அனுப்படும். ஒரு பெட்டி ரூ.14-15 ஆயிரம் மதிப்புடையது. இதனால், ரூ.40-50 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் தடைப்பட்டு விட்டது.

மலர் சாகுபடிக்கு வங்கி கடன் மற்றும் அரசின் உதவி இல்லாததாலும், கடந்தாண்டு கரோனா பாதிப்பால் மலர் சாகுபடியாளர்களில் 50 சதவீதத்தினர் தொழிலை கைவிட்டு விட்டனர்.

கடந்தாண்டு கரோனா பாதிப்பால் நிவாரணம் வேண்டி தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். அவர்கள் பரிசீலிப்பதாக கூறினர். பின்னர் தேர்தல் காரணம் காட்டி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, கரோனாவின் தாக்கம் காரணமாக மலர் சாகுபடியாளர்களுக்கு நஷ்டம் தான். மலர் சாகுபடியை குறைந்தபட்சமாக 1000 சதுர அடியில் மேற்கொள்ள நாற்றுக்கள், இடு பொருட்கள் என குறைந்தது ரூ.4-5 லட்சம் தேவை.

கரோனா தீவிரம் காரணமாக இந்தாண்டு மலர் சாகுபடி செய்வது கடினம். இதனால், தொழிலே முடங்கி விட்டது. மலர் சாகுபடியை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்