கரோனாவைக் காரணம் காட்டி ஜிப்மர் மருத்துவமனை தனது வெளிப்புற சிகிச்சையை வரும் 26-ம் தேதி முதல் முற்றிலும் நிறுத்தவுள்ளது. ஏற்கெனவே ஏராளமான நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் சூழலில், இந்த அறிவிப்பு பலரையும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கும். அதே நேரத்தில் கரோனா தொற்றாளர்களை அனுமதிக்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி கோரிமேட்டில், தேசியத் தரம் வாய்ந்த மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு மருத்துவப் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு கரோனாவால் வெளிப்புற சிகிச்சைக்குத் தொலைபேசி மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். பின்னர் இம்முறை நீக்கப்பட்டது. தற்போது கரோனாவைச் சுட்டிக்காட்டி, ஜிப்மரில் மீண்டும் வெளிப்புற சிகிச்சைக்குத் தொலைபேசி மூலம் அனுமதி பெறுவது கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது.
சிகிச்சைக்கு முன்பதிவு செய்யத் துறைவாரியான தொலைபேசி எண்கள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஹலோ ஜிப்மர் என்ற ஆன்ட்ராய்டு செயலி உதவியுடன் வெளிப்புற சிகிச்சைக்கான சேவைகளுக்கும் முன்பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டனர். ஆனால், இவ்வுதவி அனைவருக்கும் கிடைக்காமல் நோயாளிகள் அல்லாடி வருகின்றனர்.
இதுகுறித்து நாள்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெறுவோர் கூறுகையில், "முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணில் மருத்துவர், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார். அதில் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மருத்துவமனை வரக் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் நூறு நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற முடியும். ஆனால், தினமும் பல ஆயிரக்கணக்கானோர் வந்த நிலையில் வெறும் நூறு பேருக்கு மட்டும் சிகிச்சை தருவதால் சிக்கல் எழுந்துள்ளது.
» புதுக்கோட்டை நிதி நிறுவனத்தில் அலுவலர்களே திருடிய 305 பவுன் நகைகள்: போலீஸ் விசாரணை
» அரியலூர் அருகே 2 சிசுவின் உடல்கள் மீட்பு: பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு
அத்துடன் முன் அனுமதிக்கான கைபேசி குறுஞ்செய்தியை உறுதி செய்த பின்னர்தான் மருத்துவமனைக்குள் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். பல வீடுகளில் ஒரேயொரு கைபேசி இருப்பதால் கடும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், புற்றுநோய், எய்ட்ஸ், நீரிழிவு, காசநோய், ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மருந்து வழங்கப்படுகிறது. அது தீர்ந்துவிட்டால் மீண்டும் மருந்து வாங்கத் தொலைபேசியில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக அனுமதி கிடைக்காது.
தொடர்ந்து தொடர்பு கொண்டால், மருத்துவர்கள் ஒப்புதல் பெறவேண்டும் என்று கூறிவிடுவார்கள். மருந்து பெறவே கடும் முயற்சி எடுக்கும் சூழலில் நோயாளிகள் உள்ளனர். தொடர்ந்து மருந்துகளை எடுக்காமல் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.
26-ம் தேதி முதல் முற்றிலும் நிறுத்தம்
இந்நிலையில் ஜிப்மர் தரப்பில் கூறுகையில், "வெளிப்புற நோயாளி பிரிவுக்கு வரும் கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு கோவிட் பரவும் அபாயத்தைத் தவிர்க்க, வரும் 26-ம் தேதி முதல் ஜிப்மரில் அனைத்து வித நேரடி வெளிப்புற சிகிச்சைகளும் நிறுத்தப்படுகின்றன. வெளிப்புற நோயாளிகள் வசதிக்காக தொலைபேசி கலந்தாலோசனை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஜிப்மரில் அவசர சிகிச்சைகளைத் தவிர இதர அனைத்து வித சிகிச்சைகளுக்கான உள் அனுமதி நிறுத்தப்படுகிறது. அவசர அறுவை சிகிச்சை தவிர பிற அறுவை சிகிச்சைகள் குறைக்கப்படுகின்றன. இருந்தாலும் அவசர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்" என்று தெரிவித்தனர்.
இதனால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர் சிகிச்சையில் உள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஜிப்மரில் கரோனா சிகிச்சை
ஜிப்மரில் கரோனாவைக் காரணம் காட்டுவதால் ஜிப்மரில் எவ்வளவு பேர் தொற்றுக்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்று சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, புதுச்சேரி ஜிப்மரில் தற்போது 243 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளதாகக் குறிப்பிட்டனர்.
நவீன வசதிகள் அடங்கிய ஜிப்மரில் கரோனா நோயாளிகளுக்கான அனுமதியும் சிக்கலாக உள்ளது. நேரடியாக கரோனா நோயாளிகள் யாரையும் ஜிப்மரில் அனுமதிக்க முடியாத நிலையே நிலவுகிறது.
இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள தகவலில், "கரோனா தொற்று உள்ள நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளின் பரிந்துரையால் எந்த முன் அறிவிப்புமின்றி ஜிப்மர் கோவிட் மருத்துவப் பிரிவுக்கு வருகிறார்கள். பிராணவாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படும் குறிப்பிடத்தக்க நோய்கள் உள்ள நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்ப விரும்பும் எந்தவொரு மருத்துவமனையும் முன்கூட்டியே தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் (covidreferraljipmer@gmail.com) மூலம் தொடர்புகொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு தொலைபேசி எண்களைத் தந்துள்ளோம்.
நோயாளிக்கான படுக்கையை உறுதிப்படுத்திய பிறகே ஜிப்மருக்கு அனுப்ப வேண்டும். நோயாளியின் மருத்துவ விவரங்களை அறிந்த மருத்துவர்கள் மட்டுமே இந்த எண்களில், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவேண்டும். நோயாளி, அவரது உறவினர்கள் தொடர்புகொள்ளக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago