தனியார் கப்பல் மோதலில் மீனவர்கள் மாயமான விவகாரம்: முதல்வருக்கு கமல்ஹாசன் கடிதம்

By செய்திப்பிரிவு

''ஆழ்கடலில் கப்பல் மோதியதால் மாயமான மீனவர்களைக் கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தைக் கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்'' என முதல்வருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்..

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதம்:

“தமிழக முதல்வருக்கு, வணக்கம்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் ஐ.எப்.பி. ரப்பா விசைப்படகில் கடந்த ஏப்.11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 14 மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர்.

ஏப்.13 அன்று நள்ளிரவில் விசைப்படகு மங்களூரிலிருந்து 55 கடல் மைல் தூரத்தில் தெற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த ஏ.பி.எல் லீ ஹாவ்ரே (APL LE HAVRE) என்ற தனியார் கப்பல் ஒன்று மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

விசைப்படகில் இருந்த மீனவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 7 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். 6 மீனவர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட இருவரில் வேல்முருகன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். மீதமுள்ள 6 மீனவர்களைக் காணவில்லை.

இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர், தாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு பிரான்ஸ் நிறுவனமான சி.எம்.ஏ. சி. ஜி. எம். (CMA CGM Transport company) ட்ரான்ஸ்போர்ட்ஸ் சார்ந்த பார்சல்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல், நிர்ணயிக்கப்பட்ட வேகம் 18.5 நாட்ஸ் (மணிக்கு 34.26 கி.மீ. வேகம்) வேகத்தைவிட, கப்பல் அதன் அதிகபட்சமான 19.5 நாட்ஸ் (மணிக்கு 36.11 கி.மீ. வேகம்) வேகத்தில் பயணித்ததால் விசைப் படகின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

மேலும், மழையினால் வானிலை மோசமாக இருந்த நிலையிலும் கப்பல் அதி வேகத்தில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முழுப் பொறுப்பு காலநிலை மோசமாக இருந்தபோதும் கூட அதி வேகத்தில் சென்ற தனியார் கப்பல்தான். கடலில் பயணம் செய்யும்போது விதிமுறைகள் மீறி அதிவேகத்தில் சென்றதால் ஏற்பட்ட உயிரிழப்பை சாதாரண விபத்தாக எண்ணிவிட முடியாது. கடல் பகுதிகளில் பயணிக்கும் கப்பல்களில் வேகம் குறித்துக் கண்காணிக்கப்படுவது அவசியம் என்பது இந்த விபத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களில் 25 சதவீதம் மீனவ மக்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கப்பெறும் மீன்வளத்தில் சுமார் 35 சதவீதம் இங்கு கிடைக்கிறது. ஆனால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் இறப்பதும் காணாமல் மாயமாவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. தமிழக அரசு உடனே இந்தப் பிரச்சினையில் மீனவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

மாயமான மீனவர்களைக் கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும். தமிழக அரசு குளச்சல் பகுதி மீனவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணத்தை உரிய நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதிவேகத்தில் கடலில் பயணித்த கப்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. நிவாரண உதவி பெறுவதற்கு காணாமல் போனவரின் இறப்புச் சான்றிதழ் அவசியமாக இருக்கிறது. இந்திய ஆதாரச் சட்டத்தின் (1872) படி, ஒருவர் காணவில்லை என்றால் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்து 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் காணாமல் போனாலும் இந்த விதிதான் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் ஏற்கெனவே தங்கள் குடும்ப உறவை இழந்து தவிக்கும் மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தக்க உதவிகள் கிடைக்காதது பெருந்துயரம். நீண்ட காலமாக இருக்கும் இந்த நடைமுறை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடலில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதை அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் உறுதிப்படுத்துவதை நடைமுறைப்படுத்தலாம்.

கடலில் கப்பல்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட புதிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் (A traffic separation scheme TSS) கரையிலிருந்து (from the sea shore ) 50 கடல் மைல் தூரம் ஆழ்கடலில், (50 நாட்டிகல் மைல் ) புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது வெகுகாலமாக மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. மீனவர்கள் பரிந்துரைக்கும் வழித்தடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் கடலில் ஏற்படும் விபத்துகள் குறைய 90 சதவீத வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு மீனவர்களில் வாழ்வாதாரம் பாதுக்காக்கப்பட மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

விசைப் படகுகளில் ஏ.ஐ.எஸ் ( AIS - Automatic Identification System) மற்றும் தொலைதூர தொடர்புக்கு (MF- HF Radio telephone) ரேடியோ டெலிபோன் வழங்கவேண்டும். இதன் மூலம் பேரிடர் காலங்களில் மீனவர்கள் கடலில் எங்கிருந்தாலும் தொடர்புகொண்டு அவர்களைப் பாதுகாப்புடன் மீட்க முடியும்.

தமிழக அரசு தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்”.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்