வெங்காயம் விதை விலை கடும் உயர்வு: கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

வெங்காயம் விதை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கீழப்பாவூர், மேலப்பாவூர், சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படும்.

வெங்காயம் விதைகள் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றை வாங்கிச் சென்று விவசாயிகள் விதைப்பு செய்து, நாற்று வளர்ந்த பின் நடவு செய்வார்கள். நேரடி விதைப்பாகவும் வெங்காய சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில் வயல்களை உழவு செய்து விவசாயிகள் வெங்காய சாகுபடி பணிக்குஆயத்தமாகி வருகின்றனர். ஆனால், ஒரு கிலோ வெங்காயம் விதை 2 ஆயிரம் ரூபாய்க்குவிற்பனையாவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

3 மடங்கு விலை உயர்வு

இதுகுறித்து பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த விதை வியாபாரி முத்துராஜ் கூறும்போது, “கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் விதை 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்பனையானது. சின்ன வெங்காயம் விதை கிலோ 3,500 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது பெரிய வெங்காயம் விதை விலை கிலோ 1,900 முதல் 2,500 ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் விதை ஒரு கிலோ 10,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெங்காயம் விதைகள் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு வெங்காயம் விதை விற்பனை குறைந்துள்ளது. ஒரு சில விவசாயிகள் மட்டுமே விதை வாங்கிச் சென்றுள்ளனர். வெங்காயம் விதை வரத்தும் குறைவாகவே உள்ளது” என்றார்.

இதுகுறித்து கீழப்பாவூரைச் சேர்ந்த விவசாயி சிவா கூறும்போது, “ஒரு ஏக்கரில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய 6 முதல் 8 கிலோ விதை தேவைப்படும். தற்போது ஒரு கிலோ விதை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. விதைக்கு மட்டுமே 16 ஆயிரம் ரூபாய் செலவாகிவிடும். ஏற்கெனவே உரங்கள் விலை மூட்டைக்கு 400 முதல் 900 வரை உயர்ந்துள்ளது. விவசாய வேலைக்கு கூலியும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சம்பளம் உயர்ந்தாலும்கூட ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

சாகுபடி குறையும்

தற்போது ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. கிலோ 30 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையானால்தான் பெரிய வெங்காயம் சாகுபடியில் சிறிதளவாவது லாபம் கிடைக்கும். அதேபோல் சின்னவெங்காயம் கிலோ 50 ரூபாய்க்குகுறையாமல் விற்பனையானால்தான் சிறிதளவாவது லாபம் கிடைக்கும். ஆனால் இந்த அளவுக்கு விலை கிடைக்குமா என்பது சந்தேகம். தற்போது கிணறுகள், குளங்களில் தண்ணீர் உள்ளது. இருந்தாலும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விதை விலை உயர்வால் இந்த ஆண்டில் வெங்காயம் சாகுபடி குறைவாகவே இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்