திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் மினி வேன் நுழைந்ததால் பரபரப்பு: திமுக வேட்பாளர் அச்சம்

By ஜெ.ஞானசேகர்

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் டிரோன் கேமரா பறந்தது, அனுமதியின்றி ஆட்கள் நுழைவது, ஏசி இயங்குவது என்று தமிழகத்தில் பல்வேறு வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தவாறு உள்ளன. அந்த வரிசையில் திருச்சியில் இன்று வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் மினி வேன் சென்றதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. இதில், திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, முழு நேர துப்பாக்கி ஏந்திய காவல் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்தக் கட்டிடங்களுக்கு வெளியே வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் போலீஸார் 24 மணி நேரமும் நேரடிக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் 3-வது நுழைவுவாயில் வழியாக மினி வேன் ஒன்று புகுந்து, சற்று தொலைவுக்கு உள்ளே சென்றுவிட்டது. போலீஸார் அந்த மினி வேனை மறித்து விசாரணை நடத்தியதில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமரா மற்றும் கேமரா காட்சிகளைப் பார்வையிடுவதற்கான எல்இடி டிவி ஆகியவற்றைப் பொருத்துவதற்கு, பொதுப்பணித் துறையினரால் நியமிக்கப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் என்று தெரியவந்தது.

அந்த மினி வேனில் தேர்தல் பணி என்று குறிப்பிடும் வகையில் எந்த வில்லையோ, மினி வேனில் வந்தவர்களிடம் அடையாள அட்டையோ இல்லாததால் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மினி வேன் உள்ளே நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவலறிந்து மாநகரக் காவல் துணை ஆணையர் ஆர்.வேதரத்தினம் (குற்றம்- போக்குவரத்து) நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதேபோல், திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான என்.விசுவநாதன் விசாரணை நடத்தினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமரா மற்றும் எல்இடி திரை பொருத்துவதற்காக நியமிக்கப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் அதற்கான உபகரணங்களுடன் வந்துள்ளனர். இதில் பிரச்சினை எதுவும் இல்லை" என்றார்.

தகவலறிந்து திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வந்தார். அவர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த அலுவலர்களிடம் பேசி, சர்ச்சை உருவாகக் காரணமான மினி வேன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைந்ததில் இருந்து பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாகச் செய்தியாளர்களிடம் இனிகோ இருதயராஜ் கூறும்போது, "எந்தத் தேர்தலிலும் இல்லாதவாறு, இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடக்கின்றனவோ என்ற அச்சம் ஏற்படுகிறது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்