தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1,605 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. தூத்துக்குடி, போல்பேட்டை பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 12 வட்டாரங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்துக்கும் மூன்று நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று குழுக்களும் தினமும் மூன்று இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகின்றன. இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு 15 இடங்களில் காய்ச்சல் முகாமை நடத்துகின்றனர்.
எந்தெந்தப் பகுதிகளில் கரோனா பாதிப்புகள் அதிகம் உள்ளதோ, அந்தப் பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தப் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. யாருக்காவது கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேமிக்கப்படுகின்றன. மேலும், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்கிறோம்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 700 படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடியவை ஆகும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 16 கேஎல்டி திறன் கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இதனைத் தவிர கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் 455 படுக்கைகள் தயாராக உள்ளன. எனவே, அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1,155 படுக்கைகள் உள்ளன.
இதனைத் தவிர தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் கரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கோவில்பட்டியில் லெட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள கரோனா பாதுகாப்பு மையங்களில் 450 படுக்கைகள் தயாராக உள்ளன.
கரோனா அதிக பாதிப்பு உள்ளவர்களை அரசு மருத்துவமனைகளிலும், லேசான அறிகுறிகள் உள்ளவர்களை கரோனா பாதுகாப்பு மையங்களிலும், அறிகுறிகளே இல்லாதவர்களை வீட்டுத் தனிமையில் வைத்தும் கண்காணித்து வருகிறோம். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தினமும் கரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்புகொண்டு அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் கரோனா பாதிப்புள்ள இடங்களில் நுண் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் யாருக்காவது கரோனா இருந்தால் அந்தப் பகுதி நுண் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் பரிசோதனை செய்யப்படும். இந்தப் பகுதியில் கரோனா நோயாளி யாரும் இல்லை என்பதை உறுதி செய்தபிறகே கட்டுப்பாட்டுப் பகுதி நீக்கப்படும்.
கரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறுவோருக்குத் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க பல்வேறு துறை அதிகாரிகளைக் கொண்ட 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் வித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
20 hours ago