தீவிரமாகும் கரோனா; திருப்பத்தூரில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மீண்டும் திறப்பு

By ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியில் சித்த மருத்துவ முறையில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 50 முதல் 90 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று (ஏப்.18) ஒரே நாளில் 59 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தின நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 8,455 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதால் கூடுதல் சிகிச்சை மையங்களைத் திறக்கவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஆண்டு சித்த மருத்துவ முறையில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் திருப்பத்தூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் இயற்கை முறைப்படி, பாரம்பரியமிக்க உணவு வகைகள், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், சுக்குமல்லித் தேநீர், இஞ்சிச்சாறு, ஆடாதொடைக் குடிநீர், அதிமதுரக் கசாயம், நாட்டுக்கோழி சூப், கற்பூரவல்லி ரசம் உள்ளிட்டவை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கடந்த முறை 150 நாட்கள் செயல்பட்ட இந்த மையத்தில் 625 பேர் அனுமதிக்கப்பட்டு 5 நாளில் குணமடைந்து வீடு திரும்பியதால், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள கரோனாவில் இருந்த பொதுமக்களைப் பாதுகாக்க மீண்டும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், நாட்றாம்பள்ளியில் மீண்டும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (ஏப்.19) திறந்து வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதற்கான சிகிச்சை கட்டமைப்புகள் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் அனைத்து தாலுக்காக்களிலும் சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதேபோல, நாட்றாம்பள்ளி பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்கள் தங்கும் விடுதியில் 52 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகச் சித்த மருத்துவர்கள் வி.விக்ரம்குமார், டி.பாஸ்கரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த மையத்திலேயே சித்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு அவை கரோனா நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே பாரம்பரியமிக்க உணவு வகைகள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைக் குடிநீர், கபசுரக் குடிநீர், மூலிகைக் கசாயம் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டு சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் சிறப்பாகச் செயல்படவும், இங்கு அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பத் தேவையான நடவடிக்கைகளை சித்த மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்’’ என்று ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சித்த மருத்துவர்கள் விக்ரம்குமார், பாஸ்கரன், தீபா, செவிலியர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்