குளத்தை அழித்தால் பசுவைக் கொன்ற பாவம் வரும்: 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் தகவல்

By எஸ்.முஹம்மது ராஃபி

'தானமாக வழங்கப்படும் குளத்தை அழிப்பவருக்கு, பசுவைக் கொன்ற பாவம் கிடைக்கும்' என்ற தகவல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பட்டமங்கலம் கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளது.

முற்காலத்தில் குளம் வெட்டித் தருமம் செய்வதை ஒரு மனிதனின் முக்கியக் கடமையாகக் கருதினர். இதனால் தனி நபர்கள் பலர் குளங்களை வெட்டிக் கொடுத்தனர். அவ்வாறு 373 ஆண்டுகளுக்கு முன் துகவூருடையான் என்பவர் ஒரு குளம் வெட்டி அதற்கு “உடையான் நாயன்” என பெயரிட்டு, தருமமாகக் கொடுத்த தகவலைச் சொல்லும் பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பட்டமங்கலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருவாடானை அருகே பட்டமங்கலம் சிவன் கோயில் எதிரில் உள்ள குளத்தைத் தூர்வாரும்போது வெளிப்பட்ட 4 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள ஒரு தூணில் கல்வெட்டு இருப்பதாக பட்டமங்கலம் காமராஜ் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தார்.

கல்வெட்டைப் படியெடுக்கும் வே.ராஜகுரு.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:

''தூணின் இருபக்கங்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 40 வரிகள் உள்ள கல்வெட்டு உ சகாத்தம் எனத் தொடங்கி உ என முடிகிறது. கல்வெட்டில் சர்வதாரி வருஷம் ஆனி மாதம் 14ஆம் நாள் என தமிழ் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.பி.1648 ஆக இருக்கலாம் எனக் கணிக்க முடிகிறது.

அரும்பூர் கூற்றத்து கலியநேரி துகவூருடையான் பொன்னி அடைப்பார் உடைய நாயனாயன் இவ்வூரில் உடையான் நாயன் என்ற பெயருள்ள ஒரு குளத்தைத் தருமமாக வெட்டிக் கொடுத்துள்ளார். அதில், 'இக்குளத்தை அழிவு செய்தவன் கெங்கை கரையில் காராம் பசு, பிராமணனைக் கொன்ற பாபத்திலே போவன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஆயிரவேலி தன்மம் எனக் குறிப்பிட்டு அதைக் காத்தவர்களுக்கு சந்திரன், சூரியன் உள்ளவரை மாது காப்பறம் புண்ணியம் என்கிறது கல்வெட்டு. அதாவது பெண்களைக் காப்பது எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்ணியம் இக்குளத்தை காப்பதால் வரும் என்கிறது. ஆயிரவேலி என்ற பெயரில் அருகில் ஒரு ஊர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டில் குறிப்பிடப்படும் கலியநேரி, பட்டமங்கலத்திலிருந்து மேற்கில் 2 கி.மீ. தொலைவில் இருந்து அழிந்துபோன ஓர் ஊர் ஆகும். அவ்வூரைச் சேர்ந்த துகவூருடையான் பொன்னி அடைப்பார் உடைய நாயனாயன் என்பவர் சேதுபதிகளின் அரசப்பிரதிநிதியாக இருக்கலாம். கூத்தன் சேதுபதி மற்றும் தளவாய் சேதுபதி ஆகிய இருவருக்கும் உடைய நாயன் என்ற அடைமொழி இருந்துள்ளதை அவர்களின் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

சுந்தரசோழன் காலம் முதல் வரலாற்றில் இடம்பெற்றிருந்த அரும்பூர் கூற்றம் எனும் நாட்டுப் பிரிவு பாண்டியர், சேதுபதிகள் காலக் கல்வெட்டுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கி.பி.13-ம் நூற்றாண்டு பிற்காலப் பாண்டியர் கால அமைப்பில், முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட இடிந்த நிலையில் இருந்த இவ்வூரின் பழைய சிவன் கோயில், முழுவதும் அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலைச் சுற்றி இடைக்காலப் பானை ஓடுகள் காணப்படுகின்றன''.

இவ்வாறு வே.ராஜகுரு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்