தினம் ஒரு கோடி தடுப்பூசி தயாரிப்பு; இலக்கை எட்ட மத்திய அரசிடம் எந்த முன்னேற்பாடும் இல்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

By செய்திப்பிரிவு

தடுப்பூசி உற்பத்தி திறனை வைத்துக் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு திட்டமிடல் இல்லாத நிலையில், பாஜக அரசு கரோனாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற எத்தகைய ஏற்பாடுகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன, கரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறை இருக்கிற அதே நேரத்தில், பாஜக அரசு, மாநிலங்களுக்கிடையே கடுமையான பாரபட்ச அணுகுமுறையை கையாளுகிறது என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

”கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் உருவாக்கி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 1620 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஒன்றரை கோடியை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மட்டும் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போதைய பாதிப்புகளினால் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமான கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கூடுதல் நோயாளிகளை கையாளக் கூடிய வழி தெரியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன.

கரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், ஏற்கனவே ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கரோனா நோயாளிகள் பலியாகி இருக்கின்றனர்.

மத்திய அமைச்சர் வி.கே. சிங் தமது டிவிட்டர் பதிவில், 'என் சகோதரருக்கு காசியாபாத் மருத்துவமனையில் இடம் கிடைத்திட உதவுங்கள்' என்று உத்தரபிரதேச மாவட்ட ஆட்சித் தலைவரை கெஞ்சுகிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

இவர் காசியாபாத் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரின் சகோதரருக்கே இந்த கதி என்றால், சாதாரண குடிமக்களின் அவலநிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி பல்வேறு சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது. 135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 2021 ஜனவரியில் தொடங்கப்பட்டு, ஏப்ரல் வரை 13 கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.

இது மொத்த மக்கள் தொகையில் 9 சதவிகிதம் ஆகும். ஆனால், இந்திய மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு 7 கோடி தடுப்பூசிகளை பாஜக அரசு ஏற்றுமதி செய்ததை எவருமே மன்னிக்க மாட்டார்கள். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, 45 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தியது.

ஆனால், இதுவரை 25 பேரில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேசமயம், பிரிட்டனில் இருவரில் ஒருவருக்கும், அமெரிக்காவில் மூன்று பேரில் ஒருவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, நாளொன்றுக்கு 35 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இலக்கின்படி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இந்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.

மீதமுள்ள 60 சதவிகித மக்களுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022 மே மாதத்திற்குள் 145 கோடி தடுப்பூசி மருந்துகள் இந்தியாவிற்கு தேவை. ஆனால், மாநிலங்களவை குழுவின் அறிக்கையில், இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 100 கோடி முதல் 130 கோடி தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி, தடுப்பூசியை போட்டு முடிப்பதற்கு மாதம் ஒன்றுக்கு 10.5 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவை.

ஆனால், இந்தியாவில் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்பது தான் உண்மை. கரோனாவினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்க அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் குறைந்தது 70 லட்சம் முதல் 1 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன. இன்றைய சூழலில் இந்த இலக்கை எட்ட ஒருநாளைக்கு 1 கோடி கரோனா தடுப்பு மருந்துகள் தேவை. அதன்படி இந்தியா முழுவதும் மாதந்தோறும் 30 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன.

மாநிலங்களவை குழு அறிக்கையின்படி, சீரம் நிறுவனம் மாதந்தோறும் 7 கோடி முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகள் தயாரிக்கவும், பாரத் பயோடெக் நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 5 கோடி முதல் 6 கோடி தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதம் ஒன்றுக்கு 15 கோடி முதல் 16 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும்.

இத்தகைய உற்பத்தி திறனை வைத்துக் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு திட்டமிடல் இல்லாத நிலையில், பாஜக அரசு கரோனாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? கரோனாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற எத்தகைய ஏற்பாடுகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன?கரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறை இருக்கிற அதே நேரத்தில், பாஜக அரசு, கடுமையான பாரபட்ச அணுகுமுறையை கையாண்டிருப்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, ஏப்ரல் 12 நிலவரப்படி, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு 1794 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேநாளில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த போர்பந்தர் மாவட்டத்தில் 1 லட்சம் மக்களுக்கு 25,615 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், போர்பந்தர் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 12 அன்று, 1 லட்சம் மக்கள் தொகையில் 135 பேர் தான். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 1340 பேர்.

10 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை விட, போர்பந்தர் மாவட்டத்திற்கு 14 மடங்கு தடுப்பூசி அதிகமாக போடப்பட்டுள்ளது. இத்தகைய அப்பட்டமான பாகுபாட்டிற்கு காரணம் குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதாலா ? ஏன் இந்த பாகுபாடு ? தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையா ? கரோனா தொற்று முதல் அலையின்போதே, சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவில் இன்று 10 ஆயிரம் நோயாளிகளுக்கு 9 மருத்துவமனைகளும், 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் இன்னும் குறிப்பிடத்தக்க சுகாதார காப்பீட்டை பெறவில்லை. சுமார் 68 சதவிகித இந்திய மக்களுக்கு சரியான சிகிச்சையோ, அத்தியாவசிய மருந்துகளோ கிடைப்பதில்லை.

சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு நடப்பாண்டில் அதிகரிக்கப்படவில்லை. 135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 2021 ஏப்ரல் வரை 13.3 கோடி தடுப்பூசிகள் தான் போடப்பட்டுள்ளது. தனிநபர் நோய்தடுப்பு மருந்துகளில் இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்