திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியே வரமுடியாத வகையில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நகர் பகுதிகளை தொடர்ந்து தற்போது கிராமப்பகுதிகளிலும் நோய் தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. குறிப்பாக, திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதனால், கரோனா பாதிப்பும் பெரிய அளவில் இல்லாமல் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வசித்து வந்த பகுதிகளை மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு நோய் தொற்று பரவாமல் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கரோனாவில் 2-வது அலை தற்போது வேகமாக பெருகத் தொடங்கியுள்ளது.
தேர்தல் காரணமாக பொது இடங்களில் தனிமனித இடைவெளியில்லாமல் லட்சணக்கான மக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் பொதுமக்கள் திரண்டதால் பெருந்தொற்று ஜெட் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று (ஏ ப். 17) ஒரே நாளில் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 8,396 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மையங்களில் 437 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 1,996 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுவரை 5.25 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்ட 50 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி இல்லாததால் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில சுகாதாரத்துறையினரிடம் இருந்து தடுப்பூசிகள் வந்த உடன் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருப்பத்தூர் நகராட்சியில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்புப் பணிகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு பேரில், கரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 146 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கெல்லாம், தடுப்புகள் அமைக்கும் பணிகள் இன்று (ஏப். 18) தொடங்கியுள்ளது. தடுப்புகள் அணிக்கும் பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ ரத்தினம், சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையில் பணியாளர்கள் இன்று மேற்கொண்டனர்.
இப்பணிகளை திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கர்க் மற்றும் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் கூறும்போது, "3 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக வேலன் நகர், சி.கே.சி நகர், சாமிசெட்டி தெரு, ரெட்டைமலை சீனிவாசன் பேட்டை, தியாகி சிதம்பரனார் தெரு உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நோய் பரப்பும் வகையில் அங்கிருந்து யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி முடிவுகள் அறிவிக்கப்படும்" என கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago