நடிகர் விவேக் மறைவுக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அஞ்சலி: திரைத்துறைக்கு வித்திட்ட கல்லூரி கலை நிகழ்ச்சிகள் குறித்து நண்பர்கள் நெகிழ்ச்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

நடிகர் விவேக் மறைவை அடுத்து அவர் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று பேராசிரியர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவேக்கின் கல்லூரி நண்பர்கள், அவருடைய கல்லூரி கலைநிகழ்ச்சிகள் எப்படி திரைப்பயணத்துக்கு வித்திட்டது என்பது குறித்து சிலாகித்துப் பேசினர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் வெளிப்பட்ட அவரது நடிப்பு திறமையே, பிற்காலத்தில் அவர் சினிமாத்துறையில் தடம்பிடிக்க காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது என்றனர்.

பொதுவாகவே தமிழ்ச் சினிமாவையும், மதுரையும் பிரித்துப் பார்க்க முடியாது. அது கதைக்களமாக இருக்கட்டும் இல்லை மதுரையில் பிறந்து வளர்ந்தவர்கள், இங்குள்ள கல்லூரிகளில் படித்தவர்கள் தமிழ்ச் சினிமாத் துறையில் பரவியிருக்கும் அளவாகட்டும்.

அப்படியானவர்களில் நடிகர் விவேக் மிகவும் முக்கியமானவர்.

இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1978-81 பி.காம் பயின்றார். பிறகு எம்.காம் படித்துவிட்டு சிறிது காலம் மதுரையில் தொலைபேசி ஆப்ரேட்டராகப் பணியாற்றினார். பின்னர், அரசு வேலை கிடைத்து சென்னையில் பணியாற்றினார்.

அதன்பிறகு சினிமாத்துறையில் தடம்பதிக்க ஆரம்பித்தார். சினிமாவில் உச்சம் தொட்டபிறகு தான் படித்த மதுரையையும், அமெரிக்கன் கல்லூரியையும் அவர் மறக்காமல் அங்கு நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி வந்து செல்வார்.

இந்நிலையில் இன்று நடிகர் விவவேக் இறந்தநிலையில் அமெரிக்கன் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அவருடன் படித்த அவரது பழைய கல்லூரி நண்பர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தற்போதைய மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறுகையில், ‘‘எங்கள் கல்லூரியில் படித்த மாணவரான நடிகர் விவேக் மறைவு ஈடு செய்ய முடியாதது. அவர் மறைந்தாலும் எங்கள் கல்லூரியில் அவர் வைத்த மரத்தின் நிழலாகவும், காற்றாவும் எங்கள் மனதில் மறையாமல் நிற்பார், ’’ என்றார்.

பிகாம் படிக்கும்போது நடிகர் விவேக்குடன் படித்த அவரது கல்லூரி நண்பர் முகில் கூறுகையில், ‘‘நண்பனின் இழப்பை தாங்க முடியவில்லை. 3 ஆண்டுகள் பிகாம் ஒன்றாக அவருடன் படித்ததை நினைத்து அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வேன். அந்தளவுக்கு அவர் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.

கல்லூரியில் பிகாம் சேர்ந்ததும், முதல் 3 வாரங்களில் அனைவருடன் நெருக்கமானார். அப்போது ரொம்பவே ஒல்லியாக இருப்பார். 10 பேர் ஓரிடத்தில் கூடி நின்று பேசினால் இடையில் ஏதாவது கமெண்ட் அடித்து அனைவரையும் சிரிக்க வைப்பார். இப்படித்தான் ஆரம்பத்தில் அவர் கல்லூரி வளாகத்தில் அனைவர் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தார். அவர் எப்போதுமே துருதுருவென இருப்பார். எங்கள் வகுப்பறையில் 63 பேர் படித்தோம். படிப்பில் ஆரம்பத்தில் இருந்து கடைசி செமஸ்டர் வரை முதல் 10 பேரில் அவர் ஓர் ஆளாக இருப்பார்.

நாங்கள் எல்லாம் அவர் பெரிய படிப்பாளியாகத்தான் வருவார் என்று கல்லூரி ஆரம்பகாலத்தில் நினைத்தோம். போகபோகத்தான் தெரிந்தது, அவருக்கு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்தது என்பது. கல்லூரி வளாகத்தில் என்னென்ன கலைநிகழ்ச்சிகள் நடக்குமோ அதில் அனைத்திலும் பெயர் கொடுத்து கலந்து கொள்வார். மோனோ ஆக்டிங் செயவதில் விவேக்கை அடித்துக் கொள்ளவே முடியாது.

ஒரு முறை திருச்சியில் அனைத்து கல்லூரிகளுக்கான கலைநிகழ்ச்சி போட்டிகள் நடந்தது. இதில், மோனோ ஆக்டிங்கில் நடிகர் சார்லி முதல் பரிசும், நடிகர் விவேக் இரண்டாவது பரிசும் வாங்கினர். அப்போது சார்லிக்கும், விவேக்கிற்கும் சினிமாவில் நுழைவோம் என்பது தெரியாது. இருவருக்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை.

திருச்சியில் பெற்ற பரிசால், பிறகு கல்லூரிக்கு அவர் செல்லப்பிள்ளையாகிவிட்டார். விவேக்கின் நடிப்பு திறமையை வளர்த்துக் கொள்ள பழைய கல்லூரி முதல்வர் சாமுவேல் சுதானந்தாவும் முக்கியக் காரணம்.

அவர், கல்லூரி நாடகங்களுக்கு திரைவசனம் எழுதுவதற்கு வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தார். நாங்கள் படித்தபோதுதான் அமெரிக்கன் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் ஒரு மணி நேரம் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு விவேக்கிற்கு வாய்ப்பு வழங்கினர்.

அந்த ஒரு மணி நேரம் நிகழ்ச்சியைப் பார்த்த மக்கள் அவரை கைதட்டிப் பாராட்டினர். அந்த பாராட்டுதான் அவரை இன்று உலகம் அறிந்த ஒரு பெரிய நடிகராகக் கொண்டு வந்து நிறுத்தியது. அதை அவரே அடிக்கடி சொல்வார்.

அவர் படித்து முடித்த பிறகு உச்சத்திற்கு சென்றால் நண்பர்களுடன் தொடர்பிலேயே இருந்தார். கல்லூரி நண்பர்கள் கஷ்டப்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கும், அவர்கள் பிள்ளைகள் படிப்பிற்கும், திருமணத்திற்கும் உதவி வந்தார்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்