கரோனா: வேலூர் கோட்டையில் பொதுமக்கள் நுழையத் தடை- ஜலகண்டேஸ்வரர் கோயில் கொடியேற்றம் நிறுத்தம்

By வ.செந்தில்குமார்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டையில் பொதுமக்கள் நுழையத் தடை விதித்து, காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று நடைபெறுவதாக இருந்த சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டது.

வேலூரில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டையில், கிறிஸ்தவ தேவாலயம், ஜலகண்டேஸ்வரர் கோயில், காவலர் பயிற்சிப் பள்ளி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகங்கள், மாநில சுற்றுலாத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை வரும் மே 15-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டை இன்று (ஏப்.16) மூடப்பட்டது. வழக்கம்போல் இன்று காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற ஏராளமானவர்களை, நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். கோட்டையினுள் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் வாயில் கதவு மூடப்பட்டிருந்தது.

பிரம்மோற்சவம் நிறுத்தம்

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று சித்திரை மாத பிரம்மோற்சவ கொடியேற்ற விழா தொடங்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர். கோயில் கோபுரம் நுழைவுவாயில், உட்பிரகாரங்கள், கொடிமரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் கட்டியும், பூக்களால் அலங்காரம் செய்தும் அழகுபடுத்தி வைத்திருந்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியைக் காண வரும் பக்தர்கள் அமருவதற்காக ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கோயில் அறங்காவலர்கள் குழுவின் முடிவுப்படி பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஜலகண்டேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சுரேஷிடம் கேட்டதற்கு, ‘‘கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் பிரம்மோற்சவ விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவைச் சிறப்பாக நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். கிராம தேவதை பூஜை, பிள்ளையார் பூஜையும் நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இன்று (ஏப்.16) கொடியேற்றம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றத்துக்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்த கொடிமரம்.

நேற்று (ஏப்.15) இரவு கோட்டையை மூடும் தகவலை தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வேறு வழியில்லாமல் பிரம்மோற்ச விழாவை நிறுத்திவிட்டோம். கொடியேற்றம் நடத்தி, தடை ஏற்பட்டிருந்தால் பரிகார பூஜை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். கொடியேற்றம் நடைபெறாததால் பரிகார பூஜை எதுவும் நடத்தத் தேவையில்லை. வரும் நாட்களில் கோயிலில் வழக்கமான பூஜை மட்டும் நடைபெறும்’’ என்று தெரிவித்தார்.

வேலூர் கோட்டையுடன் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மேல்பாடி சோழீஸ்வரர் கோயில், முருகன் கோயிலும் மூடப்பட்டது. இங்கு தினமும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்