திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தினசரி 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர்.டி.ஆர்.செந்தில் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நோய்ப் பரவல் குறைவாக இருந்தது. தற்போது கரோனா 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கில் இருந்த கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கை எட்டி மக்களை பயமுறுத்தி வருகிறது.
இன்று ஒரே நாளில் 63 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 8,232 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,782 பேர் குணமடைந்து வீடு திரும்பினாலும் 334 பேர் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.18 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என 3 வட்டங்களில் 121 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 1,584 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை முகாம்களை அதிகரித்து, அதன் மூலம் தடுப்பூசி செலுத்துவதையும் அதிகரிக்க வேண்டும் என்றும், நகர் புறங்களை தொடர்ந்து, கிராமப்புறங்களிலும் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்டம் முழுவதும் 70 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதின் விளைவாக கடந்த 5 நாட்களில் 13 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தினசரி 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர். டி.ஆர்.செந்தில் ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ கூறியதாவது,
”திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தலின் பேரில், 70 இடங்களில் பரிசோதனை முகாம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். இன்றையதேதி வரை 43,951 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். முதல் தடுப்பூசியைத் தொடர்ந்து 2-வது டோஸ் போடும் பணியும் நடந்து வருகிறது.
தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நகர் பகுதிகளை தொடர்ந்து, கிராமப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இதில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியும், நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் 60 படுக்கையும் , ஆலங்காயம் ஆரம்ப சுகாதார மையத்தில் 30 படுக்கையும், ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கையும், குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 33 படுக்கையும்,ஜோலார்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், நரியம்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், புதூர்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையும், நாட்றாம்பள்ளி கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கை என மொத்தம் 603 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.
அதேபோல, தேவையான அளவுக்கு கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது. சுகாதாரத்துறையுடன், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறையினர் என அனைவரும் கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருவதால் வெகு விரைவில் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இருந்தாலும், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் கரோனாவை எளிதாக விரட்டலாம்’’.இவ்வாறுஅவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago