முதல்வரின் முதல் கையெழுத்து; மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழுவை அமைப்பதாக இருக்க வேண்டும்: கல்வியாளர்கள் கருத்தரங்கில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

பள்ளிக் கல்வி, உயர் கல்வி, உயர் கல்வியில் தரத்தை வரையறை செய்தல், தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட கல்வியின் அனைத்து அம்சங்களும் மாநிலச் சட்டப் பேரவையின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரும் வகையில் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் எனக் கல்வியாளர் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அம்பேத்கர் பிறந்த நாளான இன்று சென்னையில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை "மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கம்" என்ற கருத்தரங்கை நடத்தியது.

கருத்தரங்கில் வைக்கப்பட்ட கருத்துகள், தீர்மானங்கள்:

“விடுதலை இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க நடைபெற்ற விவாதத்தில், குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. அடிப்படை உரிமைகளாக எவற்றையெல்லாம் வழங்கலாம் என்று தீர்மானிக்க உருவாக்கப்பட்ட குழு, அரசின் பொருளாதார நிலை, கல்வியை அடிப்படை உரிமையாக வழங்க ஏதுவாக இல்லை என்று கூறியது.

அத்தகைய சூழலில்தான் அரசியலமைப்புச்சட்டத்தில் "அரசிற்கு வழிகாட்டும் நெறிமுறைகள்" உருவாக்கப்பட்டன. அதன் நோக்கத்தையும், அதை அரசு நிறைவேற்ற வேண்டிய அவசியத்தையும் அம்பேத்கர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அசல் பிரிவு 45, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளில் 14 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியை அரசு வழங்க வழிகாட்டியது.

பிரிவு 41 மிகத் தெளிவாக அரசின் பொருளாதார நிலையைப் பொறுத்து, கல்வியை உரிமையாக வழங்கிட வேண்டும் என்று கூறுகிறது. இந்திய அரசோ, இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநில அரசுகளோ இதை முழுமையாக நிறைவேற்றவில்லை. 1950களில், தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஊட்டும் வகையில், பாதி நாள் பள்ளி மீதி நாள் அவரவர் வீடு இருக்கும் பகுதியில் செய்யப்படும் தொழிலைக் கற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது.

அவரவர் வீடு இருக்கும் பகுதியில் நடக்கும் தொழிலைக் கற்பது என்றால் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் வேலையைத் தானே குழந்தைகளும் பழக வேண்டி இருக்கும். இது எப்படித் தொழில் கல்வி ஆகும்? என்ற கேள்வியை எழுப்பிய பெரியார் இது "குலக்கல்வித் திட்டம்" என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை, இதை அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தார்.

போராட்டத்தின் விளைவாக, காமராஜர் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. மீண்டும் முழு நாள் வகுப்புகளோடு பள்ளிகள் இயங்கத் தொடங்கின. அதுமட்டுமின்றி, அரசியல் சாசன நிர்ணயசபை உறுப்பினராக இருந்து கல்வியை அடிப்படை உரிமையாக வழங்க வேண்டும் என்று நடைபெற்ற விவாதத்தைக் கூர்மையாக கவனித்து, அத்தகைய பொறுப்பு அரசிற்கு உள்ளது என்பதை உணர்ந்திருந்த காமராஜர், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும், பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் விதமாக, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறியதை, தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. அதையும் தாண்டி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளியையும் தமிழ்நாடு அரசு திறந்தது. அத்துடன், மதிய உணவு, சீருடை என்று பலவற்றையும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கி முன்னுதாரணமான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தது. இதே காலகட்டத்தில், இ.எம்.எஸ் தலைமையிலான கேரள அரசு, தொடக்கப் பள்ளியில் கட்டணமில்லாக் கல்வி வழங்கிட "கேரளா கல்வி மசோதா" வை அறிமுகப்படுத்தியது.

இந்திய அரசால், 1968-ல் அறிவிக்கப்பட்ட கல்விக் கொள்கை, 10 +2 கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வழிமுறையில் இது நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு, +2 வகுப்புகளைப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அறிமுகப்படுத்தியது. உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தகுதி உயர்த்தப்பட்டன. அதன் விளைவாக, 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவரும் +2 படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது தமிழ்நாடு அரசு.

இதன்பலன்தான், இந்திய சராசரியை விட இரண்டு மடங்காக, உயர் கல்வியில் 50% மாணவர் சேர்க்கை என்ற இலக்கைத் தமிழ்நாடு 2020-ல் அடைந்தது. தமிழ்நாடு அரசால், மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான வசதிகள், விலையில்லாக் கல்வி உபகரணங்கள் போன்றவற்றை, இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றி வழங்கி வருகின்றன. இவை அனைத்தும், மாநிலத் தேவை உணர்ந்து ஒரு மாநில அரசால் வகுக்கப்படும், கொள்கையாலும், திட்டத்தாலுமே சாத்தியம்.

இந்த வரலாற்றுப் பின்னணியோடு கல்விக் கொள்கை உருவாக்கத்தை நாம் பார்க்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப்பட்டியலில்தான் (Concurrent List – ஒப்பிசைவுப் பட்டியல்) உள்ளது. மத்தியப் பட்டியலில் இல்லை. பல்கலைக்கழக உருவாக்கம், ஒழுங்குபடுத்துதல், கலைத்தல் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மாநிலச் சட்டப்பேரவையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

கல்வியைப் பரவலாக்கி அதை அனைவருக்கும் சமவாய்ப்புடன் வழங்குவதுதான் மத்திய அரசின் நோக்கம் என்றால், அந்த நோக்கத்தை மேலும் சிறப்பாக நிறைவேற்றிட, மாநிலச் சூழலுக்கு ஏற்றவகையில் ஒரு கொள்கையை மாநில அரசு வகுத்தல் அவசியமாகிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதற்கான வாய்ப்புகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020 பல்வேறு வகையான நெருக்கடிகளை அரசு கல்வி நிறுவனங்களுக்கு உருவாக்குகிறது.

வணிக வளாகங்களாக, கல்வி நிறுவனங்கள் மாற வழி செய்வதோடு, பள்ளிக்கு வரும் குழந்தைகளை “உள்ளூர்திறன் தேவைகளுக்கு” (local skilling needs) ஏற்ப வேலைத் திறன்களை வளர்த்துக் கொள்ளச் சொல்கிறது. குழந்தைகள் குழந்தைத் தொழிலாளியாக மாற வழி செய்வதோடு, இதையும் தாண்டி ஒரு குழந்தை +2 முடித்தால், அந்தப் படிப்பு கல்லூரிக்குச் சேரத் தகுதி இல்லை என்று அறிவிக்கிறது.

அதன்பின் அகில இந்திய அளவில் நடத்தப்படும் திறனறித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் கல்லூரிச் சேர்க்கைக்கான தகுதியாகக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கிறது. வேலைத் திறன் பெறுவதுதான் கல்வியின் நோக்கமாக மாறி, பள்ளி மற்றும் கல்லூரிகள் வேலைத் திறன் மையங்களாக மாறிட வழி செய்கிறது.

இவ்வாறு கருத்தரங்கில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய கல்விக் கொள்கை 2020ஐ, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்

குலக் கல்வித் திட்டத்தின் புது வடிவமாக உருவாகியுள்ள தேசிய கல்விக்கொள்கை 2020ஐ, சமூக நீதியின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, நிராகரிக்க வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்

மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து, சமமான கற்றல் வாய்ப்பு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைவரும் பெற்றிட வழி செய்திட "மாநிலக் கல்விக் கொள்கை"யைத் தமிழ்நாடு அரசு வகுத்திட வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழுவை அமைத்திட வேண்டும்

கோத்தாரி கல்விக்குழு தொடங்கி முனைவர் முத்துக்குமரன் குழு வரை பொதுப்பள்ளி முறைமையை வலியுறுத்தி உள்ளது. அரசின் பொறுப்பிலும் செலவிலும், அருகமைப்பள்ளி அமைப்பில், தாய்மொழி வழியில், பொதுப் பள்ளி முறைமையை உருவாக்கி, கல்வி உரிமை வழங்குதல், அனைவரும் உயர் கல்வி பெறும் வகையில் அரசு உயர்கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவது, அதன் எண்ணிக்கையைத் தேவைக்கேற்ற வகையில் அதிகப்படுத்தி, சமூக நீதியின் அடிப்படையில் கல்வி பரவலாக்கப்பட, "தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை" உருவாக்கத்திற்கான குழுவைத் தமிழ்நாடு அரசு அறிவித்திட வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.

பொறுப்பேற்கும் முதல்வரின் முதல் கையெழுத்து

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ள சூழலில், புதிதாகப் பொறுப்பேற்கும் அரசிற்கு தலைமை ஏற்கும் முதல்வர், தான் பொறுப்பேற்றவுடன் இடும் முதல் கையெழுத்து 'தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழு" அமைக்கும் அரசாணைக்கு வழிசெய்யும் கையெழுத்தாக அமைய வேண்டும் என்று இக்கருத்தரங்கு கோருகிறது.

பள்ளிக் கல்வி, உயர் கல்வி, உயர் கல்வியில் தரத்தை வரையறை செய்தல், தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட கல்வியின் அனைத்து அம்சங்களும் மாநிலச் சட்டப் பேரவையின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரும் வகையில் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இக் ருத்தரங்கம் கோருகிறது.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்