திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் மையம், கரோனா சிகிச்சை முன்னேற்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி இன்று (ஏப்.13) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியதாவது:
"திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. தேவைப்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வசதி உள்ளது. கரோனா ஊரடங்கின்போது இந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் மட்டுமே அமலில் உள்ளதால், பல்வேறு அத்தியாவசிய, அவசர சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
» முகக்கவசம் அணிந்து வந்தால்தான் இனி பெட்ரோல், டீசல்: புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் தகவல்
இதுமட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளுடன் நல்ல நிலையில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் அறிகுறிகளே தென்படாமல் கரோனாவால் பாதிக்கப்பட்ட நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் மருத்துவத் துறையினர், முன்களப் பணியாளர், பொதுமக்கள் என இதுவரை 1.41 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி இடப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் மட்டும் 91 ஆயிரம் பேர்.
தொழிற்சாலைகளுக்கே சென்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் முகாம் அமைத்து தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி இடும் பணி திருச்சி மாவட்டத்தில் நேற்று தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.12) ஒரே நாளில் அனைத்து இடங்களிலும் சேர்த்து மொத்தம் 6,589 பேருக்கு கரோனா தடுப்பூசி இடப்பட்டுள்ளது. மக்கள் தாங்களாக முன்வந்து கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்வது அதிகரித்துள்ளதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஓரிரு நாட்களில் மேலும் கரோனா தடுப்பூசிகள் திருச்சி மாவட்டத்துக்குக் கொண்டு வரப்படவுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாததற்கு நாள்தோறும் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் சுகாதாரத் துறையினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
அதிகம் பேருக்கு கரோனா தடுப்பூசி இடப்பட்ட உலக நாடுகள் வரிசையில், 9 கோடி பேருக்கும் மேல் கரோனா தடுப்பூசி இடப்பட்டு இந்தியா முதலிடத்தில் உள்ளதால், கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்வதில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
ஒரு இடத்தில் 3 பேருக்கு அதிகமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்த இடம் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதன்படி, திருச்சி மாநகரில் 11 இடங்கள் உட்பட மாவட்டத்தில் தற்போது 14 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் 4,000 முதல் 4,500 வரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேவேளையில், குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முழு மூச்சில் செயல்பட்டு வருகிறது.
காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் நடைபெற்றது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
முன்னதாக, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago