இலவச பொருட்கள் கொடுக்காத வியாபாரிகளுக்கு உள்நோக்கத்துடன் அபராதம்: காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் வியாபாரிகள் புகார்

கரோனா பெருந்தொற்று காலத்தை தவறாக பயன்படுத்தி காவல் துறையில் பணி செய்யும் சிலர் வியாபாரிகளிடம் இலவசமாக பொருட்களை கேட்பதாகவும், தர மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது உள்நோக்கத்துடன் அபராதம் விதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ரமணாஸ் உணவகம் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த உணவகத்துக்கு வந்த காவலர் ஒருவர் அங்கு இலவசமாக சாம்பார் கேட்டதாகவும், அவர்கள் தராததால் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக அந்த உணவகத்துக்கு வந்த காவல் துறையினர் அவர்களை வியாபாரம் செய்யவிடாமல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

பின்னர், நேற்று முன்தினம் திடீரென்று வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாத நிலையிலும், ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருந்த நிலையிலும் கரோனா விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி ரூ.500 அபராதம் விதிக்க முயன்றுள்ளனர்.

ரூ.5,000 அபராதம்

அப்போது அங்கு இருந்த இலவச சாம்பார் கேட்டு தகராறு செய்த காவலர், "இவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க் கூடாது, ரூ.5 ஆயிரம் அபராதம் விதியுங்கள்" என்று தெரிவித்தாராம். இதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு ரூ.5,000 அபராதம் விதித் துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் வணிகர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியாவை சந்தித்து புகார் கொடுத்துள்ளனர்.

அப்போது, உணவகத்தில் காவல் துறையினர் ஆய்வு செய்யும்போது வாடிக்கையாளர்களே இல்லை; ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

ஆனாலும் கரோனா விதிகளை அவர்கள் பின்பற்றவில்லை என்று கூறி ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான கண்காணிப்பு கேமரா பதிவுகளை உணவகம் சார்பில் எஸ்பியிடம் கொடுத்தனர்.

இந்த கரோனா காலத்தை பயன்படுத்தி போலீஸார் பல்வேறு இடங்களில் வியாபாரிகளிடம் இலவச பொருட்களை கேட்பதாகவும், காவல் துறையின் மாண்பை காப்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE