திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா விதிகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 2.45 லட்சம் அபராதம் வசூலிப்பு: 1,233 வழக்குகள் பதிவு

By ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சோதனைச்சாவடிகளில் வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து அரசுத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர் எனப் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கரோனா நோய்த் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதே நேரத்தில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், ஒரே வாகனத்தில் அதிக அளவிலான ஆட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், தேநீர் கடை, முக்கவசம் அணியாத பொதுமக்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க மாவட்டக் காவல்துறை சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் உத்தரவின் பேரில், அந்தந்தக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவலர்கள் வாகன சோதனை நடத்தி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில், 3 காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அந்தந்தக் காவல் நிலைய ஆய்வாளர்கள் சோதனைச்சாவடிகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, இது தொடர்பாக 6 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த நேதாஜி ரோடு, எஸ்.கே.ரோடு, எல்லையம்மன் கோயில் சந்திப்பு பகுதியில் நகராட்சி ஊழியர்கள் நடத்திய திடீர் ஆய்வில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. திருப்பத்தூர் அடுத்த கந்திலி சுந்தரம்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் முகக்கவசம் அணியாமலும், கரோனா விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ரூ.9 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்