சித்திரை திருவிழாவில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்: மதுரை ஆட்சியரிடம் சித்திரை திருவிழா குழு வலியுறுத்தல்

By கி.மகாராஜன்

மதுரை சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என சித்திரை திருவிழா குழு வலியுறுத்தியுள்ளது.

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா குழு தலைவர் கே.சி.திருமாறன், ஒருங்கிணைப்பாளர் எம்.சோலைக்கண்ணன், வழக்கறிஞர் எஸ்.எம்.முத்துக்குமார், அகில பாரத அனுமன் சேனை பி.ராமலிங்கம், திருநங்கை பாரதிகண்ணம்மா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவில் பக்தர்களை அனுமதிக்கவில்லை.

இந்தாண்டும் கரோனா பரவல காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள், கோவில் வளாகத்திற்குள்ளே திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என அனைத்து நிகழ்ச்சிகளையும் கொண்டாட முடிவு செய்திருப்பதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதனால் பக்தர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்துள்ளனர்.

சித்திரை திருவிழாவில் தங்களின் வாழ்வாரத்தை பெருக்கிக்கொள்ள கடன் வாங்கி சிறு, குறு தொழில் நடத்த முடிவு செய்திருந்த மக்கள், இசைக் கலைஞர்கள், கிராமிய, நாட்டுப்புற கலைஞர்கள், பந்தல் அமைப்புகள் கடந்தாண்டை போல் இந்தாண்டும் கடுமையான பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, கரோனா விதிமுறைகளை பின்பற்றி சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது போல், மதுரையில் கள்ளழகர் புறப்பாடு, திருக்கல்யாணம் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துதல் உள்ளிட்ட சித்திரை திருவிழாவில் அனைத்து நிகழ்ச்சிகளையும் பக்தர்களின் பங்களிப்புடன் கரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE