கோடைக் காலத்திலும் குளிர்வித்த குற்றாலம் அருவிகளி நீரின்றி வறண்டன. சாரல் காலத்தை எதிர்பார்த்து வியாபாரிகள் காத்திருக்கும் நிலையில், மிரட்டும் கரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மலையை தழுவிச் செல்லும் மேகக் கூட்டம், இதமான தென்றல் காற்று, ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சாரல் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க வருவது வழக்கம்.
கரோனாவால் வருவாய் இழப்பு
தென்மேற்கு பருவமழை முடிந்ததும் வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் அருவிகளில் நீர் வரத்து இருக்கும். கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு சாரல் காலம் முழுவதும் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் வருகையை நம்பி கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், கார், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வருவாயின்றி பாதிக்கப்பட்டனர். கரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் பாதுகாப்பு நெறிமுறைகயை கடைபிடித்து அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி யது. அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியது.
வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னரும் அருவிகளில் நீர் வரத்து இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். கடந்த 2 மாதமாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. அவ்வப்போது பெய்த கோடை மழையால் மிதமான அளவில் அருவிகளில் தண்ணீர் விழுந்தது. வெப்பத்தின் பிடியில் தவித்த தென்காசி மாவட்ட மக்களுக்கு குற்றாலம் அருவிகள் ஆறுதல் அளித்தன.
அருவிகள் வறண்டன
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் மீண்டும் அதிகரித்து வருகிறது. மலைப் பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்தது. சிற்றருவி, புலியருவி ஆகியவை முற்றிலும் வறண்டு விட்டன. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் பாறையையொட்டியபடி சிறிதளவு நீர் கசிகிறது. அருவிகள் வறண்டுவிட்டதால் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சாரல் காலத்தை எதிர்பார்த்து குற்றாலம் வியாபாரிகள் காத்தி ருக்கின்றனர். இதற்கிடையே கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ள்ளன. கரோனா தாக்கம் குறையாவிட்டால் அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர்.
வியாபாரிகள் அச்சம்
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “சுற்றுலாப் பயணி கள் வருகையை நம்பி குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு சாரல் காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்நிலையில் மீண்டும் கரோனா வேகமாகப் பரவுவதால் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டும் சீஸன் காலத்தில் தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago