தூங்கும் வேங்கையை இடறுகிறது மத்திய அரசு: வைகோ காட்டம்

By செய்திப்பிரிவு

இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும், மாநிலங்களின் மீதும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் என்றும், தூங்கும் வேங்கையை இடறுவது போன்ற செயலில், மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்றும், மே மாதம் 27 ஆம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல், உன்குழாய் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் தர வேண்டும் என்றும் அறிவித்து இருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன் கருத்துகளைப் பதிவு செய்வதற்குச் சமூக வலைதளங்களையே முழுமையாகப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், தற்போதைய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு மிகவும் கவலை தருகிறது.

1938 ஆம் ஆண்டில் இருந்தே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகம் தியாகம் நிறைந்த போராட்டங்களை நடத்தி இருக்கின்றது. 38 இல் தாளமுத்து - நடராசன் களபலியானது முதல், எட்டுத் தமிழர்கள் இந்தியை எதிர்த்துத் தீக்குளித்து மாண்டனர்.

1965 இல் நடைபெற்ற மொழிப்புரட்சியில், இந்திய ராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் களம் கண்டனர். பலர் உயிர்ப்பலி ஆயினர். பேரறிஞர் அண்ணா 1963 இல் மாநிலங்கள் அவையில் பேசுகையில், 'புகழ்மிக்க தமிழ் மொழிக்குச் சொந்தக்காரன் நான். எந்த மொழியில் இலக்கியங்களை, காவியங்களை நாங்கள் பெற்று இருக்கின்றோமோ, அந்த மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உரிய இடத்தைப் பெறும் வரையில், நான் மனநிறைவு அடைய மாட்டேன்' என்றார்.

இந்தி ஆட்சி மொழியாக ஆவதைத் தடுக்க நடைபெற்ற அறப்போரில், இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவு தீயிடப்பட்டது. எண்ணற்றோர் சிறை புகுந்தனர். 1967 இல், அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்தவுடன், 'தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை' என்று சட்டம் நிறைவேற்றினார். எனவே, இந்தப் பிரச்சினை இந்தி பேசாத மக்களுக்குக் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் கவலை தருகின்ற உணர்ச்சிமயமான பிரச்சினை ஆகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்; அதுவரை ஆங்கிலம் மத்திய ஆட்சி மொழியாக நீடிப்பதுதான், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சிதையாமல் பாதுகாக்கும்.

1998 இல், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபோது, அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என அறிவித்தது.

2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோதும், கொள்கை அளவில் இதை ஏற்பதாக உறுதி கூறப்பட்டது.

ஆனால் தற்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இந்தி நமது தேசிய மொழி ஆட்சி மொழி, எனவே, இதனை ஊக்குவிப்பேன் என்று கூறி உள்ளார்.

தமிழகம், இந்தி ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தித் திணிப்பை எதிர்த்து, ரத்தமும், கண்ணீரும் சிந்தி மகத்தான போராட்டங்களைத் தமிழகம் நடத்தி வந்து உள்ளது. தூங்கும் வேங்கையை இடறுவது போன்ற செயலில், மத்திய அரசு ஈடுபடக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்