அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் இறந்தவர்களின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்: நிவாரண உதவி வழங்க நடவடிக்கை

By வ.செந்தில்குமார்

அரக்கோணம் அருகே முன்விரோதத் தகராறில் கொலையானவர்கள் இரண்டு பேரின் உடலை உறவினர்கள் இன்று மாலை பெற்றுக் கொண்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் கட்ட நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள கவுதம் நகர் பகுதியில் சோகனூர் மற்றும் பெருமாள் ராஜப்பேட்டை கிராமங்களைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், சூர்யா ஆகியோர் கடந்த புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டனர். இந்த மோதல் சம்பவத்தில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த மதன், வல்லரசு, சவுந்தர்ராஜன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடிதடி மோதல் சம்பவத்தில் ஏற்பட்ட இரட்டைக் கொலையால் சோகனூர் மற்றும் பெருமாள் ராஜப்பேட்டை கிராம மக்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக அரக்கோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெருமாள் ராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மதன், அஜித், புலி என்ற சுரேந்திரன், நந்தகுமார், கார்த்திக், சத்யா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், கொலை வழக்கில் தொடர்புடைய 20 பேரைக் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அரசின் நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும், அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குருவராஜபேட்டை-திருத்தணி சாலையில் பந்தல் அமைத்துத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கோரிக்கை நிறைவேறும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இன்று நான்காம் நாளாகப் போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருமான ஜெயச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணத் தொகை முதல் கட்டமாக தலா ரூ.4. லட்சத்து 12 ஆயிரத்து 500க்கான காசோலை, அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் வரை பிழைப்பூதியமாக தலா மாதம் ரூ.5 ஆயிரம் மற்றும் 17 சதவீதம் இடர்ப்பாடு நிவாரணத் தொகையுடன் வழங்கப்படும் என்றும், காயமடைந்த இரண்டு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும், நிலம் வழங்குவது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இதனை ஏற்று இறந்தவர்களின் உடலை உறவினர்கள் இன்று (ஏப்.10)மாலை பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதல் கட்ட நிவாரண உதவியும் வழங்கப்பட்டது. இறந்தவர்களின் இறுதிச்சடங்கு நாளை (ஏப்.11) நடைபெற உள்ளது. அதுவரை அங்கு பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்