கரோனா பரவல் அச்சம்; 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

''தமிழ்நாட்டிலும் தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் கண்டிப்பாக மாணவர்களுக்கு கரோனா தொற்றும். இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஒருவேளை பொதுத் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைன் முறையில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும்'' என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் அறிவித்திருப்பதும், அதற்கான ஏற்பாடுகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது. கரோனா பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சிபிஎஸ்இ பிடிவாதம் காட்டுவது நியாயமல்ல.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மே முதல் வாரத்திலும், 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மே மாதம் இரண்டாம் வாரத்திலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதுவதற்குக் கடந்த வாரம் வரை மாணவ, மாணவிகள் தயாராகவே இருந்தனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்திருப்பதால் மாணவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் தேர்வு எழுதும்போது கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவும் வேகம், முதல் அலை பரவல் வேகத்தைவிட இரு மடங்கு அதிகமாக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எடுத்துரைத்துள்ளனர். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. எந்த நிகழ்விலும் 100 பேருக்கும் கூடுதலாக கலந்துகொள்ளக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

100 பேருக்கும் மேல் ஓரிடத்தில் ஒன்று கூடினால் கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ள நிலையில், தேர்வு மையங்களில் பலநூறு மாணவ மாணவிகளை ஒன்றாக அமரவைத்து தேர்வு எழுத வைப்பது எந்த வகையில் நியாயம்? மாணவர்களுக்கு மட்டும் கரோனா தொற்றிக் கொள்ளாதா?

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கரோனா வைரஸ் பரவல் தொடக்க நிலையில்தான் இருந்தது. ஆனாலும் அப்போது மாணவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பல வகுப்புகளுக்கான தேர்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பில் சில பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்படாத நிலையில் அப்பாடங்களில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தேசிய அளவில் தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1.26 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தமிழ்நாட்டிலும் தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் கண்டிப்பாக மாணவர்களுக்கு கரோனா தொற்றும். இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

தேர்வுகள் எனப்படுபவை மாணவர்களின் மனநிலையுடன் சம்பந்தப்பட்டவை. எந்த நிமிடம் கரோனா தொற்றுமோ? என்ற அச்சத்துடன் மாணவர்களால் தேர்வு எழுத முடியாது. அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த விடைகளைக் கூட எழுத முடியாத நிலை உருவாகும். பொதுத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால் அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதேபோன்ற தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

எனவே, தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படியான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

ஒருவேளை பொதுத் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைன் முறையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்