செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களின் பணிகளை செவிலியர்கள் செய்ய வேண்டும் என கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதற்கு செவிலியர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தை நோக்கி நிர்வாகம் நிர்பந்திப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இது நோயாளிகளின் நலன் கருதி தற்காலிகமான முடிவு என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேபோல் உள்நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் என ஏராளமான பணிபுரிகின்றனர். தற்போது பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி காலம் முடிவடைந்து விட்டதால் புதிய பயிற்சி மருத்துவர்கள் வரும்வரை அவர்கள் செய்த அனைத்து பணியை தற்போது உள்ள செவிலியர்கள் மேற்கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் முத்துக்குமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செவிலியர்களை நிர்ப்பந்தம் செய்து கையெழுத்து பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைக்கு ஊழியர் சங்கத்தினர், செவிலியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மருத்துவ பணியாளர் சங்கத்தினர், செவிலியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செவிலியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆயிரம் செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 132 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். தினமும் கட்டுக்கடங்காத மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் யாரும் சரிவர செய்வதில்லை. பயிற்சி மருத்துவர்களும் ஏனோ, தனோ என பணியாற்றுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் அனைவருக்கும் பொதுவாக நடந்துகொள்ளாமல் மருத்துவர்களுக்கு மட்டும் சாதகமாக நடந்துகொள்கின்றனர். ஒருதலைபட்சமாகவே நிர்வாகம் செயல்படுகிறது.
இந்நிலையில் கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், பயிற்சி மருத்துவர்கள் பணிக்காலம் முடிந்து சென்றுவிட்டதால் அவர்கள் பணிசெய்த அவசர சிகிச்சை பணி மற்றும் அனைத்து வார்டுகளிலும் செய்த பணிகள் அனைத்தும் புதிய பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு வரும் வரையில் மருத்துவமனை செவிலியர்கள் அனைத்து வார்டு வேலைகளையும் செய்து கொடுக்கவேண்டு மென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த அறிவுறுத்தலை மீறுபவர்களின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு முதல்வர் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பணியை தான் விரும்பி செய்வதாக கூறி அவர்களை மிரட்டி கையெழுத்து வாங்குகின்றனர். ஏற்கனவே, பணிச் சுமையாலும் திறனற்ற நிர்வாகத்தாலும் மன உளைச்சலால் தவிக்கும் செவிலியர்களுக்கு இதுபோன்ற சுற்றறிக்கை மூலம் மேலும் மன உளைச்சல் ஏற்படுகிறது. குறைந்த செவிலியர்களை கொண்டு சிறப்பாக பணி செய்து வருகிறோம்.
போதிய அளவு மருத்துவர்கள் இருந்தும் அவர்கள் எந்த பணியும் சரிவர செய்வது இல்லை. நிர்வாகத்தின் இதுபோன்று சுற்றறிக்கைகள் எங்களை போராட வேண்டுமென்று நிர்பந்தம் செய்கிறது. எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து முதல்வர் முத்துக்குமார் கூறியதாவது: ஏற்கனவே பணியாற்றிய பயிற்சி மருத்துவர்கள் பணிக் காலம் முடித்து சென்றுவிட்டனர். தற்போது அடுத்த பயிற்சி மாணவர்கள் மே 15ம் தேதிக்கு பிறகு பணியாற்ற வருவார்கள். அதுவரை, செவிலியர்கள் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்காகவே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. யாரையும் தண்டிக்கும் நோக்கிலும், மன உளைச்சல் ஏற்படுத்தவும் இந்த சுற்றறிக்கை அனுப்ப வில்லை.
பயிற்சி மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் தடங்கல் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், நோயாளிகளின் நலன் கருதியே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இது தற்காலிகமானது தான் என முதல்வர் விளக்கம் அளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago