டெல்டா மாவட்டங்களில் 24 மணிநேர மும்முனை மின்சாரம் நிறுத்தம்: தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் வேதனை

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்தாண்டு 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில், 6 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை விஞ்சி 7.71 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், உரியநேரத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது.

அதேபோல, சம்பா சாகுபடியில் கடந்த ஜனவரி மாதம் அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குறுவை, சம்பாவில் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவாவது சரிக்கட்டலாம் எனக் கருதிய விவசாயிகள் பம்புசெட் மூலம் கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். இதில், கோடை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஏப்.1-ம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 35 ஆயிரம் ஏக்கர் என 1 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் அறிவித்தபடி கடந்த 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் சீராக மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்.6-க்கு பிறகு தேவைக்கேற்ப மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும், இதனால் பயிர்கள் கருகத் தொடங்கி உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் சங்கச் செயலாளர் வைத்திலிங்கம் கூறியது: முதல்வர் அறிவிப்பால் எங்களுக்கு 6 நாட்கள் மட்டுமே 24 மணிநேர மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக கிடைத்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 6-ம் தேதிக்குப் பின் 12 மணி நேரத்துக்குக்கூட மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை. எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் எனத் தெரியவில்லை. மேலும், குறைந்த அழுத்த இருமுனை மின்சாரம் காரணமாக மோட்டார்கள் பழுதாகி வருகின்றன. இதற்கிடையே, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், போதிய நீரின்றி பயிர்களும் கருகி வருகின்றன” என்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜயகவுரியிடம் கேட்டபோது, “டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கு தேவையான மும்முனை மின்சாரம் என்பது, மாநில அளவிலான விநியோகப் பிரிவிலிருந்து, மின் உற்பத்திக்கு ஏற்ப வழங்கப்படுகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்