கரோனா முன்னெச்சரிக்கை எனக் கூறி சிறு வணிகர்கள் வியாபாரம் செய்யத் தடை விதித்திருப்பதை ஏற்க முடியாது என்றும், இந்த உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் மே 5-ம் தேதி 38-வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்வது குறித்த வணிகர் சங்க மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இன்று நடைபெற்றது. இதில், வேலூர் மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, மாநிலத் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டலத் தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலைவாசியைக் குறைக்க பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். அதேபோல பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.
நாடு முழுவதும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு அகற்ற வேண்டும். சுங்கச்சாவடி கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் கரோனா காலத்தில் வியாபாரிகள் மீது விதிக்கப்படும் அபராத முறையைக் கைவிட வேண்டும். வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வரவில்லை என்றாலும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது ஏற்க முடியாது. கரோனா குறித்த விழிப்புணர்வுகளை வியாபாரிகள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது கரோனா 2-வது அலை எனக்கூறி, தமிழகத்தில் சிறு வியாபாரிகள் கடை நடத்த ஏப்ரல் 10-ம் தேதி (முதல் தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது. 50 சதவீதம் சிறு வியாபாரிகளை சுழற்சி முறையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
அரசு அறிவித்த இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடத்தப்படும். கரோனா காலத்தில் வியாபாரிகள் மீது சுமத்தப்பட்ட அபராதத் தொகையை அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு யார் ஆட்சி அமைத்தாலும் வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடிதம் வழங்க உள்ளோம்’’
இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* சென்னையில் நடைபெறும் மாநாட்டில் வேலூர், சேலம் மண்டலத்தில் இருந்து அனைத்து வணிகர்களும் கலந்துகொள்ள வேண்டும்.
* கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வியாபாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கரோனா விதிமீறல் எனக் கூறி கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது, தண்டனை வழங்குவது உள்ளிட்ட சட்ட அத்துமீறல்களை முழுமையாக அரசு தளர்த்த வேண்டும்.
* வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு பகுதியில் மஞ்சள் சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும்.
* வேலூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க டோல்கேட் பகுதியில் இருந்து பச்சையப்பாஸ் சில்க்ஸ் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
* காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி, மல்லகுண்டா பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
* திருப்பத்தூரில் மாம்பழம் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
* காவலூர், ஜவ்வாதுமலைப் பகுதியில் மூலிகைப் பண்ணை அமைக்க வேண்டும்.
* ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, திருத்தணி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.
* சோளிங்கரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
* ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல்வேறு வசதிகளைச் செய்து தரக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவர்கள் கேசவன் (கிருஷ்ணகிரி), பெரியசாமி (சேலம்), ஜெயக்குமார் (நாமக்கல்), சரவணன் (ராணிப்பேட்டை), மாதேஸ்வரன் (திருப்பத்தூர்), சேலம் மண்டலத் தலைவர் வைத்தியலிங்கம், வேலூர் மாவட்டத் தலைவர் ஞானவேலு, மாநிலத் துணைத் தலைவர்கள் கிருஷ்ணன், ஸ்ரீதரன், பாஸ்கரன், ராஜேந்திரன், பொன்னுசாமி, மாவட்டச் செயலாளர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago