மதுரையில் ஒரே நாளில் 18 தெருக்களுக்கு ‘சீல்’: மக்கள் வெளியேறாதவாறு தடுப்பு வைத்து அடைப்பு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் கரோனா தொற்று அதிகமாக உள்ள 18 தெருக்களை ஒரே நாளில் மாநகராட்சி மூடி ‘சீல்’ வைத்தது.

வாகனங்களும், மக்களும் செல்லாதவாறு அந்தத் தெருக்களை தகரங்களை வைத்து மாநகராட்சி ஊழியர்கள் அடைத்துச் சென்றனர்.

மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் இதேநிலை நீடிப்பதால் நேற்று முதல் கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் கரோனா தொற்று அதிகமாக உள்ள தெருக்களை கணக்கெடுத்து அந்தத் தெருக்களுக்கு ‘சீல்’ வைத்து அப்பகுதி மக்களை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.

மதுரையில் இன்று ஒரே நாளில் 18 தெருக்களுக்கு ‘சீல்’ வைத்து அந்த தெருவுக்குள் யாரும் நுழைய முடியாதவாறு தகரங்களை வைத்து அடைத்துள்ளது.

அதுபோல், அந்தத் தெருவில் வசிக்கும் மக்களும் வெளியே வராதவாறு அவர்களுக்கு தேவையான குடிநீர், பால், மருந்து, மளிகை மற்றும் காய்கறிகள் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்களே வாங்கிக் கொடுக்கும் பழைய நடைமுறை இன்று தொடங்கியது.

தொற்று பரவிய ஒரு ஹோட்டல், ஒரு வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு மாநராட்சி ‘சீல்’ வைத்தது.

மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் மக்கள் அதிகளவு கூடாதவாறு பார்த்துக் கொள்ளும்படி மாநகராட்சி எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE