முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.5000 வரை அபராதம்: கரோனா பரவலைத் தடுக்க ராமதாஸ் யோசனை

By செய்திப்பிரிவு

''இரண்டாவது அலையில் கரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதது, பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காததே காரணம் என்கிற உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்'' என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்த்திராத வகையில் 3,645 ஆக உயர்ந்திருக்கிறது. கரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டியதும், அத்தகைய நடவடிக்கைகளுக்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ்நாட்டில் மார்ச் மாதத் தொடக்கத்தில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 450 என்ற அளவுக்குக் குறைந்திருந்தது. அதனால் ஏப்ரல் மாதத்தில் கரோனாவின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலையாகிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் கரோனா பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 6ஆம் தேதி தினசரி கரோனா பரவல் 562 மட்டும்தான். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவு 648% அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு தினசரி கரோனா பரவல் 562லிருந்து 3,645 ஆக அதிகரிக்க 56 நாட்கள் ஆயின. ஆனால், இப்போது 30 நாட்களில் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இரண்டாவது அலையில் கரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இந்த உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

கரோனா பரவல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைக் கூட கடைப்பிடிக்காததுதான் இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்குக் காரணம் ஆகும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பேருந்துகள் மற்றும் தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட எவரும் முகக் கவசம் அணியாததுதான் கரோனா பரவல் வேகம் அதிகரித்ததற்குக் காரணம் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரங்களும் கரோனா பரவலுக்குக் காரணமாக அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.

கரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டின் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதுதான் அரசின் முதற்கடமையாக இருக்க வேண்டும். ஒருபுறம் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி, மறுபுறம் கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் நோய்ப்பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என்ற இருமுனை அணுகுமுறையைத் தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.

தமிழக அரசின் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழக மக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலமாக மட்டுமே கரோனா வைரஸ் பரவல் வேகத்தை முழுமையாகக் குறைத்து நோயை முற்றிலுமாகப் போக்க முடியும். தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு கூறிவிட்டது. அதற்கு மாற்றாக தேவையற்ற விஷயங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது.

இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். கரோனா பரவல் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும் வரை, ஒருமுறை வெளியில் செல்ல வேண்டுமென்றாலும் கூட, அத்தகைய பயணம் அவசியம் தானா? என நூறு முறை சிந்திக்க வேண்டும்.

ஒருவேளை தவிர்க்க முடியாமல் வெளியில் செல்ல வேண்டுமென்றால் கூட முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியை அடிக்கடி கைகளில் தெளித்துக் கொள்ளுதல், பொது இடங்களில் குறைந்தபட்சம் இரு மீட்டர் இடைவெளி விடுதல், வெளியில் சென்று வீடு திரும்பியதும் கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பு மக்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கரோனாவைத் தடுக்க இது மிக அவசியமாகும்.

பொது இடங்களில் கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்துத் தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பிறகும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அபராதம் விதிப்பதோ, பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதோ தண்டிப்பதற்காக அல்ல. கரோனா என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து தங்களையும் காப்பாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காகத்தான் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். அரசு, மக்கள் என அனைவரும் கைகோத்து கரோனா என்ற பெருந்தீமையை அடியோடு ஒழிக்கப் பாடுபட வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்