வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தொல். திருமாவளவன் இன்று (ஏப். 07) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. எனினும், எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை.

சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.

அதேநேரத்தில், வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கோடை வெயில், கரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் சுமார் 75% வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த இயந்திரங்கள் 2 பூட்டுகளால் பூட்டப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து, கருத்துத் தெரிவித்திருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, அவை வாக்குப் பதிவு செய்யப்படாத இயந்திரங்கள் என்றும், அவற்றை கவனக்குறைவாகக் கையாண்டதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.இது ஏற்புடையதல்ல.

வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்ற இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்ட அசாமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாஜக வேட்பாளரின் காரிலேயே கொண்டுசெல்லப்பட்டதையும் அந்த காரை மடக்கிப் பிடித்ததற்காக பொதுமக்கள் மீதே வழக்கு போடப்பட்டிருப்பதையும் பார்த்தோம். அத்தகைய நிலை தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது.

அதற்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் விழிப்போடு இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதி வரை அவற்றைப் பாதுகாப்பதிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனிக்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE