ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு 

By கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதிகளைச் சேர்ந்த 2 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி(தனி) தொகுதிக்குட்பட்ட கமுதக்குடி கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில் மதுரை-ராமேசுவரம் ரயில்பாதை செல்கிறது.

இப்பகுதியில் இருந்த ரயில்வே கேட்டை கடந்த ஓராண்டுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரயில்வே நிர்வாகம் அகற்றிவிட்டது. அதனால் கமுதக்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள 6 கிராம மக்கள் பேருந்து நிறுத்தம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு ரயில்வே மேம்பாலத்தை கடந்து 4.5 கி.மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் இக்கிராம விவசாயிகள், மாணவர்கள், மில் தொழிலாளர்கள், தமிழ்நாடு குடிமைப்பொருள் கழக பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இக்கிராம மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிகாரிகளை சந்தித்த முறையிட்டும், பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தீர்வு கிடைக்காததால் இன்று சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்தனர்.

இக்கிராம மக்களுக்காக கமுதக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2173 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கிராம மக்கள் அனைவரும் வாக்குப்பதிவை புறக்கணித்ததால் வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெறிச்சோடிக்கிடந்தன. அதனையடுத்து இன்று காலை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ரயில்வே கேட்டை திறக்கமுடியாது எனவும், சுரங்கப்பாதை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆனால் கிராம மக்கள் சுரங்கப்பாதை அமைக்கும்வரை ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து தேர்தலை புறக்கணித்தனர். அதேபோல் பிற்பகலில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் ஒத்துக்கொள்ளாமல் அனைவரும் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்.

இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்கு வந்த 6 பேர், பரமக்குடி தேமுதிக வேட்பாளர் செல்வி உள்ளிட்ட 29 பேர் மட்டும் வாக்குப்பதிவு செய்தனர்.

மேலும் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட மண்டலமாணிக்கம் ஊாட்சி கோடாங்கிப்பட்டி கிராமத்தினர் சேதமைடைந்த சாலையை செப்பன்னிட்டுத்தராததால் தேர்தலை புறக்கணத்தனர்.

இங்குள்ள வாக்குச்சாவடியில் 232 வாக்காளர்கள் உள்ளனர். கமுதி வட்டாட்சியர் மாதவன் கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், கோடாங்கிப்பட்டி கிராம மக்கள் ஒத்துக்கொள்ளாமல், தேர்தலை புறக்கணித்தனர்.

இருந்தபோதும் இவ்வாக்குச்சாவடியில் ம.பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மட்டும் வாக்களித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE