நெல்லை மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 50.05% வாக்குப்பதிவாகியுள்ளது.

மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளிலும் 1924 வாக்குச் சாவடிகளில் 13,53,193 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருநெல்வேலி மாநகரில் ஒருசில வாக்குச் சாவடிகள் மாதிரி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களை வரவேற்கும் ஊழியர், மருத்துவ குழு, சாமியானா பந்தல், அலங்கார திரைச்சீலைகள், பலூன்கள் கட்டப்பட்டிருந்தன.

பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் 112 ஏ வாக்குச் சாவடி பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தது. இங்கு பணியாற்றிய அனைத்து தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் என்று அனைவரும் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்தல் பணியில் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தில் 309 பதற்றமான வாக்குச் சாவடிகள், 172 கூடுதல் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியபோது வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

திருநெல்வேலியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை தெற்கு பஜார், டவுன், பேட்டை பகுதிகளில் பல வாக்குச் சாவடிகளில் காலையில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தனர்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் செங்குளம் கணேசன் செங்குளத்திலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அதை பத்திரிகை புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் புகைப்படம் எடுக்க அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கணேசன் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கு தர்னாவில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து புகைப்படம் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர் வெளியேறினார்.

திருநெல்வேலி மாநகரில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகர காவல்துறையினருக்கும், துணை ராணுவ படையினருக்கும் மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் மோர், குடிநீர், வாழைப்பழம் வழங்கி உற்சாகப்படுத்தினார். அத்துடன் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கும் குடிநீர் வழங்கினார்.

மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவுக்குப்பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டன.

கடந்தமுறை வாக்குப்பதிவு சதவிகிதம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2016 சட்டப் பேரவை தேர்தலில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவிகிதம்:

திருநெல்வேலி- 70.01, அம்பாசமுத்திரம்- 72.60, பாளையங்கோட்டை- 60.07, நாங்குநேரி- 71.92, ராதாபுரம்- 70.90. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் மட்டும் 67.12 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

வெறிச்சோடிய சாலைகள்:

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வாகனங்கள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடியிருந்தன. ஏராளமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் கடைவீதிகள் வெறிச்சோடியிருந்தன.

திருநெல்வேலியிலிருந்து மதுரை, நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் குறைந்த அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிக கூட்டம் காணப்பட்டது. திருநெல்வேலி மாநகரிலும் குறைந்த அளவுக்கே நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE