காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு; காலை 11 மணி வரை 20.70 சதவீதம் வாக்குப் பதிவு

By வீ.தமிழன்பன்

புதுச்சேரி சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்து வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 568 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை: நெடுங்காடு (தனி) தொகுதி - ஆண்கள்: 14,589, பெண்கள்: 16,943, மூன்றாவது பாலினம்: 2, மொத்தம்:31,534.

திருநள்ளாறு தொகுதி - ஆண்கள்: 14,263, பெண்கள்: 16,999, மொத்தம்: 31,262.

காரைக்கால் வடக்குத் தொகுதி - ஆண்கள்: 16,665, பெண்கள்: 18,972, மூன்றாவது பாலினம்: 16, மொத்தம்: 35,653.

காரைக்கால் தெற்கு தொகுதி - ஆண்கள்: 14,798, பெண்கள்: 17,150, மூன்றாவது பாலினம்: 1, மொத்தம்: 31,949.

நிரவி-திருப்பட்டினம் தொகுதி - ஆண்கள்: 14,438, பெண்கள்: 16,731, மூன்றாவது பாலினம்:1, மொத்தம்: 31,170.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டத்தில் ஏற்லெனவே இருந்த எண்ணிக்கையை விட, தற்போது 71 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 234 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு, வெப் கேமராக்கள் மூலம் இணைய வழியில் கண்காணிக்கப்படுகின்றன.

வாக்குப் பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டதால் கூட்ட நெருக்கடியின்றி மக்கள் விரைவாக வாக்களித்து வருகின்றர். தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை பரிசோதித்து, சானிட்டைசர் மூலம் கைகளை தூய்மைப்படுத்தச் செய்து, கையுறை அளித்து வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில், கோயில்பத்து மார்க்கெட்டிங் சொசைட்டி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச் சாவடியில், வாக்குப் பதிவு இயந்திரம் பழுதான காரணத்தால், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு சுமார் அரை மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. காலை 11 மணி வரை 20.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தற்போதையை எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.மாரிமுத்து, மதச்சார்பற்ற கூட்டணியில் இத்தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படாததால் விரக்தியடைந்து சுயேச்சையாக போட்டியிடும் அக்கட்சியின் மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் விக்னேஸ்வரன் ஆகியோரிடையே பிரதானப் போட்டி நிலவுகிறது.

திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.வும் முன்னாள் அமைச்சருமான ஆர்.கமலக்கண்ணன், பாஜக சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், தேசிய ஜனநாயக் கூட்டணியில் இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா ஆகியோரிடையே முக்கியப் போட்டி நிலவுகிறது.

இத்தொகுதியில்தான் வாக்களர்களுக்கு பிரதமர் படத்துடன் தங்கக் காசு, ரூ.2 ஆயிரம் ரொக்கம் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 149 தங்கக் காசுகளும், ரூ.90, 500 ரொக்கமும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டத்திலேயே இத்தொகுதி பல்வேறு காரணங்களால் உற்று நோக்கப்படுகிறது.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், தற்போதைய எம்.எல்.ஏவான பி.ஆர்.என்.திருமுருகன் ஆகிய இருவருக்குமிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

காரைக்கால் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ கே.ஏ.யு.அசனா, திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.

நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் மகன் வி.எம்.சி.எஸ்.மனோகரன், திமுக சார்பில் போட்டியிடும் எம்.நாக தியாகராஜன், திமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் சுயேச்சையாக களம் காணும் தற்போதைய எம்.எல்.ஏ கீதா ஆனந்தன் ஆகியோரிடையேதான் பிரதானப் போட்டி நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்