சென்னையில் வாக்குப்பதிவு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னையின் 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்று வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,061 இடங்களில் 5,911 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிய 28,372 மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏற்கனவே மூன்றுகட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய வாக்குச்சாவடி எண் அடங்கிய இறுதி ஆணை இந்திய தேர்தல் ஆணைய பொதுப் பார்வையாளர் முன்னிலையில் தயார் செய்யப்பட்டு, இன்று (05.04.2021) சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்குச்சாவடி மையம் குறித்த தகவல் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 14,276 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,095 கட்டுப்பாட்டு கருவிகள், 7,984 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் இயந்திரங்கள் (VVPAT), பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பல்வேறு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் பாதுகாப்பு அறைகளிலிருந்து (Strong Room) 423 வாக்குப்பதிவு மண்டல அலுவலர்கள் (Sector Officers) மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு காவலர்கள் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி அந்தந்த தொகுதியின் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்று வருகிறது.

கரோனா பெருந்தொற்றை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு விதமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தொடா வெப்பநிலைமானி மூலம் வாக்காளர்களை பரிசோதிக்கவும், வாக்காளர்கள் கைகளை முறையாக சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்யவும் ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வலது கையில் அணிந்து கொள்ள பாலித்தீன் கையுறைகள் (Disposable Polyethylene Hand Gloves), வாக்குச்சாவடியில் பணியில் உள்ள அலுவலர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய தனியே சானிடைசர்கள், முகக்கவசங்கள் (Face Shield) மற்றும் சர்ஜிகல் முகக்கவசம் (Surgical Face Mask), ரப்பர் கையுறை (Single Use Rubber Gloves) வழங்கப்படும்.

மேலும், வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சராசரிக்கு மிக அதிகமாக இருந்தாலும், கோவிட் வைரஸ் தொற்றின் பாதிப்பு இருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களுக்கும் முழு பாதுகாப்பு கவச உடை (PPE Kit) போன்ற கோவிட் வைரஸ் தொற்று தடுப்பிற்கான 13 வகையான பொருட்கள் தனியே ஒரு அட்டைப்பெட்டியில் வழங்கப்பட உள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுசுகாதாரத்துறை மூலமாக இன்று (05/04/2021) மாலை மற்றும் நாளையும் (06.04.2021) கிருமிநாசினிகள் தெளிக்கப்படும். வாக்குச்சாவடிக்கு வரும் அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்திய கையுறை, PPE Kit போன்ற மருத்துவக் கழிவுகளை (Bio Medical Waste) சேகரிக்க 6,000 மஞ்சள் நிறப் பையுடன் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் வசதி, சக்கர நாற்காலி, கழிவறை, குடிநீர் வசதி, சாமியானா பந்தல் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. 1061 வாக்குச்சாவடி அமைவிடங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிபுரிய 1061 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் முழுவதுமாக மகளிர் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பு ஏற்பாடுகளுடன் கூடிய வாக்குச்சாவடி ஒன்றும், மாதிரி வாக்குச்சாவடி நான்கும் அமைக்கப்பட்டுள்ளது. 30 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 577 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 2467 இதர வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3074 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதற்றமான, மிகவும் பதற்றமான 607 வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச்சாவடி நிலையம் அமைந்துள்ள இடம், வரிசை எண், பாகம் எண் தொடர்பாக விவரங்களை தெரிந்து கொள்ள Voters Helpline என்கின்ற அலைபேசி செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாக்காளர்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC Number) உள்ளீடு செய்து தங்கள் வாக்குப்பதிவு நிலையம் மற்றும் இதர விவரங்கள் தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள சீட்டு (Booth Slip) வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள சீட்டு கொண்டு வர இயலாத நபர்கள் வாக்குச்சாவடியில் உள்ள நிலைய அலுவலரை அணுகி தங்களது வாக்குச்சாவடி மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

எனவே, இந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் அவரது கடமையிலிருந்து மீறாமல் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் எனவும், வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 06 அன்று தங்களுடைய வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும்”.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்