தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி. காங்கயம் பகுதி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், காங்கயம் காளை ஆராய்ச்சி அறக்கட்டளையை உருவாக்கி பாரம்பரியக் காளைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். சுற்றுச்சூழல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றுக்காகக் குரல் கொடுத்துவந்த கார்த்திகேய சிவசேனாபதி, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை வேளாண் பல்கலைக்கழக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பரவலாக மாநிலம் முழுவதும் அறியப்பட்டார்.
கடந்த ஆண்டு ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில், அவருக்காகக் கட்சியில் புதிதாக சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டது. அதன் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சிவசேனாபதி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கார்த்திகேய சிவசேனாபதியுடன் ஒரு பேட்டி:
மாநிலம் அறிந்த முகம், கொங்கு மண்டலத்தில் அதிக செல்வாக்கு பெற்ற அமைச்சர், முதல்வருக்கு நெருக்கமானவர், பல்லாண்டுகளாக அரசியல் களத்தில் உள்ளவர் வேலுமணி. அவரை எதிர்த்து தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடுகிறீர்கள். எப்படி இருக்கிறது இந்த அனுபவம்?
மக்களுக்கு வேலுமணி மீது பெரிய நம்பிக்கையையோ, கண்மூடித்தனமாக அவரைப் பின்பற்றுவதையோ எங்கும் பார்க்க முடியவில்லை. வழக்கமாக சில அரசியல்வாதிகளுக்கு அத்தகைய மக்கள் கூட்டம் இருக்கும். அந்த அரசியல்வாதிகள் தங்களின் கட்சிக் கொள்கைகளைத் தாண்டி மக்களுக்கு நல்லது செய்திருப்பர். ஆனால், இவர் அப்படி எதையும் செய்துவிடவில்லை.
வீட்டுக்குப் பத்திரிகை கொண்டு செல்லும் மக்களுக்கு ஆயிரம் ரூபாயோ, இரண்டாயிரம் ரூபாயோ கொடுப்பார். அதுதான் அவர் செய்த ஒரே உதவி. யாருக்கும் அவர் மீது உண்மையான நன்றியுணர்வு இல்லை. மக்கள் அனைவரும் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தொகுதிக்குள் சென்றால், திருவிழாவில் தொலைந்த குழந்தை மீண்டும் கிடைத்தால் எவ்வளவு பிரியமாக இருப்பார்களோ அதுபோல மக்கள் நடத்துகிறார்கள். என்னைக் குடும்ப உறுப்பினராகவே ஏற்றுக் கொண்டுவிட்டனர். நான் வெளியூர்க்காரன் என்றெல்லாம் புரளியைக் கிளப்பிவிட முயற்சி செய்தனர். அது சாத்தியப்படவில்லை.
திமுக தலைமை உங்களுக்கு சொந்தத் தொகுதியை அளிக்கவில்லையா? அமைச்சரை எதிர்த்து நிற்க, அரசியல் களத்துக்குப் புதியவரான உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?
நானே சில சமயம் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நமக்கே நம்மைப் பற்றித் தெரியாதது, தலைவர் ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது போல என்று. அதிமுகவின் நட்சத்திர அமைச்சர், அதிகார பலம் பொருந்திய வேட்பாளரைச் சமாளிப்பது பெரிய விஷயம். அதை உணர்ந்துதான் ஸ்டாலின் என்னை நிறுத்தி இருக்கிறார்.
தொகுதிக்குத் தேவையான எல்லா நலத் திட்டங்களையும் அமைச்சர் வேலுமணி சரியாக நிறைவேற்றியுள்ளார் என்று பேசப்படுகிறதே?
இல்லை. அது அவரைப் பற்றி, அவரே கட்டமைத்துக் கொண்ட பிம்பம். தொகுதிக்கு உள்ளே சில இடங்களில் சாலை கூட சரியாக அமைக்கப்படவில்லை. இப்போதுகூட அவசர அவசரமாக சில சாலைகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பணிகளுக்கான செலவின விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்துவதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்முடைய பணத்தை எடுத்துத்தானே வேலுமணி ஊழல் செய்திருக்கிறார் என்று மக்கள் கோபத்தில் உள்ளனர்.
கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் குறிப்பாகத் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணிதான் வெல்வார் என்று சொல்லப்படுகிறதே?
அப்படிக் கூறிவிடமுடியாது. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பல நாட்களுக்கு முன்பு எடுத்தவை. ஆனால், தற்போது களம் வேறாக உள்ளது. ஏன் சமீபத்தில் எடுக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் இருவருக்கும் 1 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. தற்போது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அலை வீசுகிறது. கொங்கு மண்டலத்திலேயே மக்கள் அதிமுக, பாஜக மீது வெறுப்பில் உள்ளனர். வெறுப்பு அரசியலைக் கையில் எடுத்துக்கொண்டு, வளர்ச்சி எதுவும் இல்லாமல் அவர்கள் ஆட்சி செய்துவருகிறார்கள்.
நீட் தேர்வால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இதுவரை 11,457 இடங்கள் பறிபோயுள்ளன. இதில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் வசிக்கும் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ இடங்களை இழந்துள்ளனர். இதே கொங்கு மண்டலத்தில்தான் எட்டு வழிச்சாலையைக் கொண்டு வந்து பெண்களையும் விவசாயிகளையும் முதியோர்களையும் சாலையில் நிற்க வைத்து, கண்ணீர் விடவைத்தனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டதும் கொங்கு மண்டலம்தான். ஏனென்றால் சிறு, குறுதொழில் நிறுவனங்கள்தான் அவர்களின் பலமே. அவை அனைத்தும் முடங்கிவிட்டன. இவை அனைத்தாலும் மக்களவைத் தேர்தலைவிடச் சிறப்பான பதிலைக் கொங்கு மக்கள் அதிமுகவுக்குத் தருவார்கள்.
கரோனா காலத்தில் அமைச்சர் வேலுமணியும் அவரின் சகோதரரும் ஊழலில் ஈடுபட்டதாக முதலில் சொன்னவர் நீங்கள்தான். இப்போது எதையெல்லாம் முன்வைக்கிறீர்கள்?
கரோனா காலத்தில் 32 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் ஃபினாயிலை ரூ.280க்கு வாங்கி இருக்கின்றனர். இதுபோல லட்சக்கணக்கான பாட்டில்கள் வாங்கப்பட்டன. சாலை பெருக்கும் துடைப்பம் ஒன்றின் விலை ரூ.30, இதை ரூ.300 கொடுத்து வாங்கியுள்ளார் வேலுமணி. 1 கிலோ ப்ளீச்சிங் பவுடரின் விலை ரூ.70. இதைக் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதுபோக மாஸ்க், சானிடைசர் வாங்கியதிலும் ஊழல். இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. ஆர்டிஐ மூலம் பெற்றவை. எந்த மனசாட்சியும் இல்லாமல் இதைச் செய்திருக்கிறார் வேலுமணி. இதுகுறித்து இதுவரை அவர் வாய் திறக்கவில்லை.
இவை தவிர எந்த கான்டிராக்ட் என்றாலும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுக்கிறார் வேலுமணி. ஒரு திட்டத்துக்கு அரசு ஒப்பந்தப் புள்ளி கோரிய நிலையில், ஒரே இணைய முகவரியில் இருந்து வெவ்வேறு பெயர்களில் இயங்கும் அவரின் 3 நிறுவனங்களும் அதற்கு விண்ணப்பித்ததைக் கண்டுபிடித்தோம். தன்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற ஆணவத்தில் வெளிப்பாடுதான் இதெல்லாம். இந்தத் தேர்தலோடு அவரின் ஊழலுக்கு முடிவுரை எழுதுவோம்.
மத்திய அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான விருது, சிறந்த உள்ளாட்சித் துறைக்கான விருதைத் தொடர்ந்து தமிழகம் பெற்று வருகிறதே? ஸ்கோச் தங்க விருது, தேசிய நீர் புதுமை விருது, மின் ஆளுமை விருது ஆகியவற்றை வேலுமணி பெற்றது அவரின் நிர்வாகத் திறனைக் குறிக்கவில்லையா?
மத்திய அரசு விருதுகள் அதற்கான மரியாதையை இழந்து 7ஆண்டுகள் ஆகின்றன. இதுவே வாஜ்பாய் அரசு கொடுத்த விருதாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். விருதின் மரியாதையை அவர் பாதுகாத்திருப்பார். ஆனால், இந்த அரசு தனது ஆதரவானவர்களை உற்சாகப்படுத்த என்ன விருது வேண்டுமானாலும் கொடுக்கும். இதில் உண்மையான ஒரு சிலருக்கு வேண்டுமானால் விருது சென்றிருக்கலாம். ஆனால், வேலுமணிக்கெல்லாம் விருது கிடைத்திருப்பது எப்படிப்பட்டது என்பதை மக்களே அறிவார்கள்.
திமுகவினர் பெண்களை அவமதிப்பதாகப் பிரதமர் உட்பட எதிர்க்கட்சிகள் அனைவருமே குற்றம் சாட்டுகிறார்களே, லியோனிகூட உங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும்போதுதான் பெண்களின் உடல்வாகு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்...
யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று அவர் அவ்வாறு பேசவில்லை. கார்த்திகேய சிவசேனாபதி பாரம்பரிய நாட்டு இனங்களைப் பாதுகாத்து வருகிறார் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது நாட்டுக் கால்நடைகளின் சிறப்பையும், கலப்பின மாடுகள் குறித்தும் பேசினார். அப்போது கலப்பினப் பாலை அருந்துவதால் ஏற்படும் உடற்பருமன் குறித்துப் பேசியவர், அதை விளக்கத் தேவையில்லாத உவமானத்தைத் தெரிவித்துவிட்டார். அது சர்ச்சையாகிவிட்டது. அந்தக் கருத்தைக் கூறியிருக்கக்கூடாது, அது தேவையற்றது.
முஸ்லிம் வாக்குகளைத் தன் வசப்படுத்தத்தான் வேலுமணி, தொகுதிக்குள் கபஸ்தான் (கோயில்) கட்டிக்கொடுத்தார் என்கிறார்களே...
முஸ்லிம் மக்கள் யாரும் இவரிடம் ஏமாந்துவிட மாட்டார்கள். சிஏஏ, என்ஆர்சி சட்டங்களில் அதிமுக என்ன நிலைப்பாட்டை எடுத்தது என்பது குறித்து அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். அதிமுகவின் வாக்கு இல்லை என்றால் அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. மக்கள் வாழ்வதையே பிரச்சனையாக்கிவிட்டு, அவர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுத்து என்ன பயன்?
திமுகவினர் நிறைய குண்டர்களை வைத்திருக்கிறார்கள் என்று வேலுமணி குற்றம் சாட்டியுள்ளாரே?
கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை அராஜக, அட்டகாச அரசியல் எடுபடாது. வெளிப்படையாக ரவுடியிசம் செய்துகொண்டு பொது வாழ்க்கையில் ஈடுபடவே முடியாது. வேலுமணியுடன் இருக்கும் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். என்னுடன் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள், நாகரிகமானவர்கள், மெத்தப் படித்தவர்கள். ஆனால், வேலுமணியுடன் இருப்பவர்கள் வடவள்ளி சந்திரசேகர் உள்ளிட்ட ரவுடி கும்பல்கள். சந்திரசேகர் காவல்துறை, வனத்துறை அதிகாரிகளை அடித்ததையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாம் என்று அழைத்தால் வேலுமணி வர மறுக்கிறார்.
தேர்தல் அரசியலில் சக போட்டியாளர்களை நேரடியாக விமர்சிப்பது வழக்கம். ஆனால், வேலுமணி, உங்களின் தலைவர் ஸ்டாலினை மட்டும்தானே விமர்சிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் அளவுக்கு நீங்கள் அவருக்குச் சமமான வேட்பாளர் இல்லையா? உங்களைத் திட்டமிட்டே புறக்கணிக்கிறாரா?
என்னைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதி இல்லை என்று நினைக்கிறாரோ என்னவோ? அவர் பேசினால் நான் விவாதத்துக்கு அழைப்பேன் என்ற பயமாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் என்னைப் பற்றி அவர் பேசாமல் இல்லை. அவதூறு பேசிக் கொண்டுதான் இருக்கிறார். இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். ஸ்டாலின் குறித்துப் பேச வேலுமணிக்கு என்ன தகுதி இருக்கிறது? கொள்ளையடிக்கும் அரசியல், பணத்தைக் கொடுக்கும் அரசியல் மட்டும்தான் அவருக்குத் தெரியும்.
கட்சியில் சேர்ந்த உடனே பதவி, தற்போது வேட்பாளர் சீட் எனக் குறுகிய காலத்தில் திமுகவில் வளர்ந்திருக்கிறீர்கள். இது காலம் காலமாய் உழைக்கும் சக, மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதா?
எனக்குத் தெரிந்து யாரும் அதிருப்தி அடையவில்லை. எல்லோருமே ஆதரவு கொடுக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மத்தியிலும் கட்சியினர் இடையிலும் அதிக வரவேற்பு இருப்பதைப் பார்க்கிறேன்.
தீவிர அரசியலில் இறங்கிவிட்டதால் நீங்கள் செய்துவந்த சூழலியல் பணிகள் பாதுகாக்கப்படுமே?
இப்போது சற்றே தொய்வு ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு எங்கள் குழுவினர் முழுவீச்சில் பணியைத் தொடங்குவர். அதில் என்னுடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். காங்கயம் காளை அறக்கட்டளை உறுப்பினர்கள் 12 பேர், அலுவலக ஊழியர்கள், 80 தன்னார்வலர்களுடன் பணிகள் தொய்வின்றி நடைபெறும்.
ஆற்றங்கரையில் மணல் அள்ளுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மாட்டு வண்டிகளை வைத்து மணல் அள்ளுவது சரியா? செந்தில் பாலாஜி பேசியது சர்ச்சையானதே?
செந்தில் பாலாஜி பேசியது, பல நூறு ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது பற்றித்தான். வன உரிமைகள் சட்டம் 2006-ன் படி வனத்தில் வசிக்கும் பழங்குடிகள் அங்கே கிடைக்கும் சிறு பொருட்களைச் சேகரித்து விற்கலாம். அதுபோல ஆற்றங்கரையோர மக்கள் தங்களின் தேவைக்காக மணலை அள்ளிப் பயன்படுத்துவதில் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஏனெனில் தினந்தோறும் ஆயிரம் மாட்டு வண்டிகள் ஓராண்டுக்கு மணல் அள்ளினாலும், அது பொக்லைன் மூலம் ஒரு நாளில் அள்ளப்படும் மணலை விடக் குறைவாகத்தான் இருக்கும். அதில் சுரண்டல் இருக்காது. எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. உண்மையான சூழலியல் ஆர்வம் கொண்டவர்கள் முதலில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கொள்ளையடிக்கப்படும் மணல் திருட்டைப் பற்றிப் பேசட்டும்.
வளர்ச்சி குறித்து நாம் பேசும்போது மணல் பயன்பாடு தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் மீன்பிடித் தடைக்காலம் போல, ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்காவது மணல் அள்ளுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மணலுக்கான மாற்றுப் பொருட்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தலாம். அதேபோல மணல் தேவைப்படாத கட்டிடக் கலைகளைப் பயன்படுத்தி, மேற்கத்திய பாணி வீடுகளை உருவாக்குவது குறித்து யோசிக்கலாம். இதற்கு ஒட்டுமொத்த இந்தியாவோ, குறைந்தபட்சம் மாநிலங்களோ முன்வர வேண்டும்.
கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரதமர் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்வது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், நீங்கள் எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பிரதமரை அழைப்பது சரியா? பிரதமரின் மாண்பைக் குறைக்கும் செயல் ஆகாதா?
பிரதமரை இழிவு செய்யும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அவர் தமிழகத்தில் எவ்வளவு பிரபலமற்ற நபராக இருக்கிறார் என்பதையே மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். நாடு முழுக்க எத்தனையோ இடங்களில் அவர் புகழ்பெற்ற நபராக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் இல்லை. ஏனென்றால் அவர் பேசிய அனைத்துமே பொய். தமிழகத்துக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால் எனக்குக் கிடைக்கும் வாக்குகளை அதிகரிக்கச் செய்யவே என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வரச் சொல்லி இருந்தேன். வேறு உள்நோக்கம் எதுவுமில்லை.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago