நன்மையை வீழ்த்த பெருந்தீமை துடித்துக் கொண்டிருக்கிறது; கடந்த கால வரலாற்றை ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நன்மையை வீழ்த்த பெருந்தீமை துடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த கால வரலாற்றை ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் நிம்மதியாக வாழ முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதற்கான 16-வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களை விட இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. மகாபாரத புராணத்தைப் போன்று நன்மையை வீழ்த்த பெருந்தீமை துடித்துக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் ஆகும்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. இத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு கட்சியின் தலைவரும், அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இதுவரை நடைபெற்றது பிரச்சாரக் காலம் என்றால், இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் முடிவடைவது முதல் நாளை மறுநாள் வாக்குச்சாவடிக்குச் சென்று நீங்கள் வாக்களிப்பது வரையிலான காலம்தான் இந்த ஜனநாயகத் திருவிழாவில் நமது விலைமதிப்பில்லாத வாக்கை யாருக்கு அளிப்பது என்பது பற்றி, தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தீர்மானிப்பதற்கான சிந்தனைக் காலம் ஆகும்.

நமது வாழ்க்கையில் அனைத்தையும் நாம் தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறோம். அவ்வாறு இருக்கும்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப் போகிறவர்கள் யார்? என்பதையும் அவர்களின் தகுதி, திறமை மட்டுமின்றி, கடந்த கால வரலாற்றையும் ஆய்வு செய்துதான் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் நிம்மதியாக வாழ முடியும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஏன் நீடிக்க வேண்டும்? என்ற வினாவிற்கு ஆதாரபூர்வமான விடைகள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறது. மக்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொழில் வளம் பெருகியிருக்கிறது. கரோனா காலத்திலும் கூட தமிழகத்திற்கு ரூ.1.50 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கிறது. உழவர்கள் நலன் காக்க புயல் மழையால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இயல்பான நிவாரணத்தை விட கூடுதல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்கள், 6 பவுன் வரையிலான நகைக் கடன்கள் ஆகியவையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சமூக நீதியை நிலைநிறுத்த வன்னியர் மக்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு - அவினாசி திட்டம் உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை நடைமுறைப்படுத்தியது, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகை ஆகிய மாவட்டங்களைப் பிரித்து ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்கியது என அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான செயல் திட்டங்களையும் அதிமுக - பாமக கூட்டணி தயாரித்துள்ளது. கோதாவரி - காவிரி இணைப்பு, ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டில் நீர்ப்பாசனப் பெருந்திட்டங்கள், மாணவர்களுக்கு இலவசக் கல்வி, அனைவருக்கும் இலவச சுகாதாரம், உழவர்களுக்கு இடுபொருட்கள் அனைத்தும் இலவசம் என்பதுடன், ஆண்டுக்கு ரூ.30,000 வரை மானியம், மாணவர்களுக்கு வெளிநாட்டில் இலவச உயர்கல்வி, கூடுதல் மருத்துவக் கல்லூரிகள், உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் என ஏராளமான செயல்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் பாமக முன் மொழிந்திருக்கிறது.

அதிமுகவும் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,500 உதவி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், அனைத்து வீடுகளுக்கும் வாஷிங் மெஷின் இலவசம், இலவச கேபிள் டிவி இணைப்பு, வீடு தேடிச் சென்று ரேஷ்ன் பொருட்களை வழங்கும் திட்டம், ஆட்டோ வாங்க ரூ.25,000 மானியம், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திற்கும் மேலாக புதிய அரசில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மக்கள்தொகைக்கு இணையாக நிர்ணயிக்கப்படும்; பிற சாதிகளுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள அனைத்து சமுதாயங்களும் உரிய உள் இட ஒதுக்கீடு கிடைப்பதையும் கண்டிப்பாக உறுதி செய்வேன்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ), காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர், சத்துணவுப் பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள், நியாயவிலைக் கடை ஊழியர்கள், சர்க்கரை ஆலைப் பணியாளர்கள், கிராமப்புற ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரிடம் நேரில் பேசி நிறைவேற்றச் செய்வேன். மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிற கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

அதேநேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழ்நாடு என்னவாகும்? என்பதை சற்று நினைத்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் நிலப்பறிப்பு, கொலை - கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரிக்கும், வன்முறை தலைவிரித்தாடும், ஒரு குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் திரைப்படத் துறையிலோ, ஊடகத் துறையிலோ தாக்குப்பிடிக்க முடியாது, பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது, பிரியாணி, பஜ்ஜி, தேநீர் கடைகள் வைத்துகூட ஏழைமக்கள் பிழைக்க முடியாது என்பன போன்ற சீரழிவு செயல்கள்தான் அதிகரிக்கும். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் தமிழ்நாடு வாழ்வதற்கு உகந்த மாநிலமாக இருக்காது. இப்படி ஒரு நிலை உருவாவதை நல்லவர்கள் எவரும் விரும்பவே மாட்டார்கள்.

எனவே, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவதை உறுதி செய்ய நாளை மறுநாள் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து அதன்மூலம் தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்