சட்டப் பேரவை தேர்தலில் போட்டியி டுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரக் களத்தில் காணாமலே போய் விட்டனர்.
சட்டப் பேரவை, மக்களவை, உள் ளாட்சித் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் போட்டி யிடுவது வழக்கம். அரசியல் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிலர், சுயேச்சையாகப் போட்டியிட்டு தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெற்றது உண்டு.
1952-ம் ஆண்டு முதல் 2016 வரை 15 முறை நடைபெற்ற ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் 3 முறை, அதிமுக 6 முறை, திமுக 4 முறை, மனிதநேய மக்கள் கட்சி ஒரு முறை வெற்றிப் பெற்றுள்ளன. இருப்பினும் 1957-ம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட சண்முக ராஜேஸ்வர சேதுபதி என்பவர் வெற்றி பெற்றார்.
கடைசி சேதுபதி மன்னர்
சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜ ராஜேஸ்வர சேதுபதியின் மகனும், அவருக்கு அடுத்து ராமநாதபுரத்தில் ஆட்சிக்கு வந்த கடைசி சேதுபதி மன் னரும் ஆவார். ஜமீன் ஒழிப்புச் சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட 1948-ம் ஆண்டுடன் இவருடைய ஆட்சி முடிவடைந்ததும் அரசியலில் ஈடுபட்டார்.
இவர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், ராமநாத சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவராகவும் இறுதி வரை இருந்தார். 1957-ல் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.
வரும் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 9 வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் 10 பேர் என மொத்தம் 19 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாக்கு சேகரிப்பதைக் காண முடிந்தது. சிலர் பெயரளவில் துண்டுப்பிரசுரம் அச்சிட்டு, தாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் மட்டும் விநியோகித்தனர். மற்றபடி சுயேச்சை வேட்பாளர்களைப் பார்ப்பதே அரிதாக உள்ளது.
பெருமைக்காக தேர்தலில் போட்டி யிட்ட நிலை மாறி, இப்போது பணத்துக்கு விலை போகும் சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். முன்பெல்லாம் சுயேச்சை வேட்பாளர்களின் பிரச்சாரத்துக்கு ஆட்டோவே பிரதானம். அதில் ஒலிபெருக்கிகளை கட்டிக் கொண்டு, பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இணையாக வீதிவீதியாகப் பிரச்சாரம் செய்வார்கள். இப்போது நிலைமை தலை கீழ். வேட்பு மனு தாக்கல் செய்வதோடு சரி. பின்னர் பிரச்சாரக் களத்தில் பார்க்கவே முடிவதில்லை.
வாக்குச் சாவடிக்குள்ளும், வாக்கு எண்ணும் மையத்திலும் தங்களது பிரதிநிதிகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரே பெயருக்கு சிலரை சுயேச்சைகளாகக் களம் இறக்குவதும் உண்டு.
சில சுயேச்சைகள், வேட்பு மனுத் தாக்கல் செய்த பின், பிரபலமான கட்சி வேட்பாளரிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு, டெபாசிட்டை ‘தக்க’ வைத்துக் கொள்வதாகவும் மக்கள் பரவலாகக் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago