'உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு', 'உங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு’... கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தமிழகத்தின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பெண்களின் குரல் இன்னும் 48 மணி நேரத்தில் ஓய்வுபெறப் போகிறது.
காலையில் வீடு வீடாகச் சென்று தேர்தல் கட்சிகளின் அறிக்கைகளை விநியோகித்து, மதியம் அந்தந்தக் கட்சியின் தேர்தல் கிளை அலுவலங்களின் நாற்காலிகளில் அசதியாக அமர்ந்து சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு, மாலையில் மீண்டும் உற்சாகத்துடன், கட்சிகளுக்கான வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர் இப்பெண்கள்.
காலம் காலமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கும் இப்பெண்கள் தொடர்ந்து மக்களை எழுப்பும் ஒலிப்பெருக்கிகளாகவே பயன்படுத்தப்படுவர்.
கட்சிகளுக்குள் பெண்களின் செயல்பாடு என்பது அவர்களின் குடும்ப ஆண்கள் அனுமதித்தால் மட்டுமே தொடர்கிறது. அரசியலில் இப்பெண்களின் பெரும்பாலான முடிவுகள் தன்னியல்பாக நகர்வதில்லை. எல்லா முடிவுகளுக்கும், பின்னால் அவர்களை இயக்கும் சக்தியாக ஆண்களே உள்ளனர்.
அதுமட்டுமல்லாது அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று நுழையும் பல பெண்கள் முன்னேற்றம் என்பது கட்சிகளில் உறுப்பினர்களாகவும் , குறிப்பிட்ட பதவிகளில் மட்டும் அங்கம் வகிப்பவர்களாகவே உள்ளனர். அவற்றில் மகளிர் அணித் தலைவர், கொள்கை பரப்புச் செயலாளர் பதவி என சில பதவிகளே கிட்டும். இப்பதவிகளுடன் பல பெண்களின் அரசியல் பயணம் நிறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் இயங்கும் முக்கியக் கட்சிகள், அக்கட்சியில் பல ஆண்டுகளாக செயல்படும் பெண்களுக்கு எந்த அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் வழங்குவதில்லை என்பதே உண்மை.
தலைமைகள் இல்லா பெண்கள்
பெண்களுக்கு சமவுரிமை வழங்குவதற்கோ, அவர்களைச் சமமாக மதிப்பதற்கோ தற்போதுள்ள கட்சிகளில் தலைமைகள் இல்லை.
கட்சியில் ஒரு பெண் இருக்கிறார் என்றால் அவரது கணவர் அல்லது அவரது தந்தை சார்ந்தே அப்பெண் தகுதிக்கு உள்ளாக்கப்படுகிறார். வாரிசு அரசியல் தலைவர்களுக்கும் இதேநிலைதான் தொடர்கிறது. பெண் தலைவர்கள் தலைமையிடத்துக்கு வந்தாலும் அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தன் பதவி நலனுக்காகவும், தன் கட்சி சார்ந்த நலனுக்காகவும், பாலினப் பாகுபாட்டுக்குத் துணை சென்று விடுகிறார்கள் என்பதை நாம் வரலாறுகளில் கண்டதை மறுப்பதற்கில்லை.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை பெண்களுக்கான எந்தத் தலைமையும் கடந்த 50 வருடங்களில் உருவாகவில்லை. தமிழக அரசியலில் பெண்கள் பிரிந்து இருக்கிறார்கள். அதுவும் மிக நுட்பமாகப் பிரிந்திருக்கிறார்கள். இந்த நிலையைதான் இங்குள்ள அரசியல் கட்சிகளும், ஆண் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம்?
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். இதில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை வெறும் 411 பேர்தான். 177 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவில் இம்முறை 15 பெண் வேட்பாளர்கள் ( 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 30 ஆக இருந்தது) மட்டுமே போட்டியிடுகின்றனர். இம்முறை 173 தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சியான திமுகவில் 12 பெண்கள் ( 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 19 ஆக இருந்தது) மட்டுமே போட்டியிடுகின்றனர்.
உலகம் முழுவதும் சமீப ஆண்டுகளாக அரசியலில் பெண்களின் பங்களிப்பு வளர்ந்துள்ளதாக 'இண்டர் பார்லிமெண்டரி யூனியன்' அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தியாவின் முற்போக்கு மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் அரசியலில் பெண்களின் நிலை தொடர்ந்து பின்னோக்கி இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இது அச்சம் தரக் கூடிய செய்தி.
கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் போன்ற கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கு பெண்களுக்குச் சம உரிமை அளித்துள்ளது நிச்சயம் பாராட்டுக்குரியது. கவனிக்கத்தக்கது. இருப்பினும் சமவுரிமை, சமத்துவத்தைப் பேசும் தமிழகத்தின் முகமாகக் கருதப்படும் திராவிடக் கட்சிகள் பெண்களை அதிகாரப்படுத்துவதில் தோற்றுவிட்டன. திராவிடக் கட்சிகளின் 50 வருட ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது கரைசேரா கப்பலாகவே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
பாலியல் நிகர் நிலையில் தமிழ்நாடு தோற்றுவிட்டது: எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்
''பெண்கள், ஆண்கள், சிறுபான்மையினர், தலித்துகள், மாற்றுப் பாலினத்தவர் எல்லோரும் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் இருப்பதுதான் நாட்டின் வளர்ச்சி என்று ஆய்வுகளும், வரலாறுகளும் நமக்குக் கூறுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பன்முகத்தன்மை அதிகம். அவ்வாறு இருக்கும்போது பிரதிநிதித்துவம் மிக முக்கியமானது அல்லவா? எனவே, பாலினத்திலும் பிரதிநிதித்துவம் மிக முக்கியமானது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது முன்னர் 33% ஆக இருந்தது. பின்னர் ஜெயலலிதா அதனை 50%ஆக உயர்த்தினார்.
உள்ளாட்சித் தேர்தலை தவிர்த்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாம் கொடுக்கவில்லை. தமிழகத்தை முற்போக்கு மாநிலம் என்று கூறுகிறோம். அவ்வாறு இருக்கும்போது அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இங்கு யாருமே வலுவாக பேசவில்லை. இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள், பெண்களுக்கு மொத்தமாக 6% இடங்களையே ஒதுக்கியுள்ளன.
இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். அரசியல் வெறும் ஆண்களுக்கான சபையாகவே இன்றளவும் உள்ளது. இவ்வாறு இருக்கும்போது ஆண்கள் நிரம்பிய சபை எடுக்கும் முடிவுகள் எப்படி இருக்கும்?
சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி போட வேண்டுமா? கருக்கலைப்பு என்பது எத்தனை மாதங்களுக்கு சட்ட ரீதியானது? பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர் கருக்கலைப்பு செய்ய வேண்டுமா? போன்ற எல்லா முடிவுகளையும் இங்கு ஆண்கள்தான் எடுக்கின்றனர். பெண்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஆண்கள் முடிவு செய்கிறார்கள். பெண்களுக்கான பிரதிநிதிகள் இங்கு கிடையாது.
சரி பெண்கள் அரசியலிலே இல்லையா? நிச்சயமாக இருக்கிறார்கள். இதனை நாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் காணலாம். பெண்கள் அங்கு ஆணி வேராக இருந்து செயல்படுகிறார்கள். உண்மையைக் கூற வேண்டும் என்றால் தேர்தலை இயக்குவதே பெண்கள்தான். அரசியல் கட்சிகள் தொடர்ந்து நிலைத்திருக்க அக்கட்சியில் உள்ள பெண்கள்தான் உழைக்கிறார்கள். இங்குள்ள அரசியல் கட்சிகள் பெண்களை அடிமட்ட வேலை செய்வதற்கே பயன்படுத்திக் கொள்கின்றன. கட்சி நிர்வாகத்தில் பெரும்பாலும் பெண்களுக்கு இடம் அளிக்கப்படுவதில்லை. அதிகபட்சமாக கட்சியின் மகளிர் அணிக்கு பெண்களைத் தலைவராகப் போடுவார்கள் அவ்வளவுதான். கட்சிகளைப் பொறுத்தவரை பெண்களுக்கு எந்த அதிகாரமும் தராமல் அவர்களை ஒரு தொழிலாளியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். தமிழகத்தில் கடந்த 50 வருடங்களில் பெண்கள் அரசியலில் முக்கிய இடங்களில் இல்லை .
கோவிட் காலத்தில் எங்கு எல்லாம் பெண்கள் ஆட்சியில் இருந்தார்களோ அங்கு எல்லாம் தொற்று சிறப்பாகக் கையாளப்பட்டது. பெண்கள் இயல்பிலேயே நல்ல தலைவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அரசியலில் பெண்களுக்கு வெற்றி சதவிகிதம் அதிகம் என்றுதானே புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அவ்வாறு இருக்கும்போது ஏன் பெண்களுக்கு இடம் தர மறுக்கிறீர்கள். தமிழக அரசியலைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு என்பது அவர்களிடம் உள்ள பணத்தைப் பொறுத்தது. பணம் தான் சீட்டைத் தீர்மானிக்கிறது. பெண்களிடம் பெரும்பாலும் சொத்துகள் இருப்பதில்லை. இதனால் அவர்களை வேட்பாளாராக நிறுத்தக் கட்சிகள் தயங்குகின்றன. அப்படிக் கொடுத்தாலும் வாரிசாக உள்ளவர்களுக்குதான் இடம் அளிப்பார்கள்.
நீங்கள் திராவிடம் , சமூக நீதி பேசினாலும் உண்மையில் பாலியல் நிகர் நிலையில் தமிழ்நாடு தோற்றுவிட்டது. அரசியலில் பெண்களுக்கான அதிகாரம் வழங்குதலை நாம் தொடர்ந்து விவாதப் பொருளாக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கான ஆரோக்கியான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இதனை ஏற்படுத்த வேண்டும் எனில் நாம் தொடர்ச்சியாக பெண்ணியத்தைப் பேச வேண்டும். அதனை நடைமுறை வாழ்வில் புகுத்த வேண்டும்'' என்கிறார் எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்.
பெண்கள் அரசியல் அதிகாரத்தைப் பறிகொடுத்துவிட்டார்கள்: சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா
''அரசியலில் பெண்களுக்கான அதிகாரம் என்பது குறித்து நாம் எல்லோருமே தேர்தல் நேரத்தில்தான் கவலை கொள்கிறோம். இந்த நிலை முதலில் மாற வேண்டும். ஏனென்றால், ஒரு கட்சியில் ஒருவர் வேட்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் கட்சியில் முன்னதாகவே அவர்களுக்குப் பொறுப்பு இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போது ஒவ்வொரு கட்சியிடமும் உங்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் எத்தனை % பெண்கள் இருக்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை அக்கட்சித் தலைமை வெளியிட வேண்டும்.
இதிலிருந்துதான் நாம் நமது குரலை ஒலிக்க வேண்டும். தேர்தல் அறிவித்த 15 தினங்களில் நாம் இந்தக் கேள்வியை கேட்டால் யாரும் நம்மை திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள். எனவே, நாம் அடுத்த தேர்தலுக்கு இப்போதிலிருந்து குரல் கொடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.
பெண்கள் அரசியல் அதிகாரத்தைப் பறிகொடுத்ததன் காரணமாகத்தான் இன்று சமூக, பொருளாதார, கல்வி அதிகாரங்களைப் பறிகொடுத்து நிற்கிறார்கள். உலகில் இரண்டு வழி அதிகாரங்கள் இருந்தன. ஒன்று மத வழியிலான அதிகாரம், மற்றொன்று அரசு வழியிலான அதிகாரம். இதில் இரண்டிலும் அப்போது பெண்கள் இருந்தார்கள். ஆனால், இரண்டையும் பெண்கள் பறிகொடுத்துவிட்டார்கள்.
இதற்கு முக்கியக் காரணம் பெரிய மதங்களின் தோற்றம். இந்தப் பெரிய மதங்கள் தோன்றலில்தான் பெண்களின் அதிகாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. படைக்கும் கடவுள், காக்கும் கடவுள், அழிக்கும் கடவுள். இதில் எதிலும் பெண்கள் இல்லையே? அவ்வாறு இருக்கும்போது பெண்களுக்கு எப்படி அதிகாராம் வழங்குவார்கள். எனவே நாம் தொலைத்த இடத்தில்தான் தேட முடியும். தனித் தொகுதிகளைப் பெற எவ்வாறு குரல் ஒலிக்கப்பட்டதோ அவ்வாறே பெண்களுக்குக்கான தொகுதிகளுக்கும் குரல் ஒலிக்க வேண்டும்.
திராவிடக் கட்சிகள் பெண்களை அதிகாரப்படுத்துவதில் பின்தங்கியுள்ளது உண்மைதான். எனவே, பெண் இயக்கங்கள் அவர்களுக்கு சமூக அழுத்தத்தைக் கொடுப்பதன் விளைவாகத்தான் பெண்களுக்கு உரிய அதிகார இடங்கள் கிடைக்கும். நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்'' என்று சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களைவிட 10 லட்சம் கூடுதல் பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதன்பொருட்டே அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவச வாஷின் மெஷின் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பெண்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் இந்தப் பிற்போக்குத் தன்மைக்கு எதிரான குரலை பெண் அரசியல் தலைவர்களும், பெண் அமைப்புகளும் தொடர்ச்சியாகப் பதிவு செய்ய வேண்டும். வரும் தேர்தல்களில் அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மீட்டெடுக்கப்பட வேண்டும். இனியும் மவுனம் வேண்டாம்.
* லாட்லி ஊடகக் கூட்டாய்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை.
இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் பார்வை மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும் லாட்லி (Laadli ) மற்றும் யுஎன்ஹெப்பிஏவுக்கும் (UNFPA) தொடர்பில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago