நடிகர் சிவாஜி குடும்பத்தில் இருந்து பாஜக பிரச்சாரத்துக்கு கிளம்பி உள்ளார் ராம்குமார் கணேசன். சிவாஜியின் மூத்த மகன். பரப்புரைகளில் சிவாஜியின் மீதான பிரியத்தை பொதுமக்கள் வெளிப்படுத்த தயங்குவதில்லை என்கிறார் அவர். கன்னியாகுமரி தொடங்கி தமிழகத்தில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் ராம்குமார் கணேசன். தாராபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கான முகாமிட்டிருந்தவரை, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் சந்தித்தோம்.
பாஜகவில் சேர்ந்ததும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி விட்டீர்களே?
பாஜகவில் தொண்டனாக எனது பணியைத் தொடங்கி உள்ளேன். பாஜகவினர் மட்டுமின்றி, அதிமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் என அனைவரும் நன்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். பெண்கள், தங்களது குடும்பத்தில் ஒருவராக என்னை வரவேற்கிறார்கள். கோவை, திருப்பூர் உட்பட பல்வேறுபகுதிகளிலும், பாஜகவினர் திட்டமிட்டு தீவிர களப் பணியாற்றுவது, எனக்கு பிடித்துள்ளது. கருத்துக் கணிப்புகளால் எங்கள்பிரச்சாரம் தொய்வடையவில்லை. களத்தில் போட்டி கடுமையாக உள்ளது. இந்திராகாந்தி இருந்தபோது 1980 மற்றும் இந்திரா காந்தி மறைந்த 1984-ம் ஆண்டுகளில் அப்பா சிவாஜியுடன், தமிழகம், புதுச்சேரி மற்றும் பாலக்காடு உட்பட 41 எம்.பி.தொகுதிகளுக்கு பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். அன்றைக்கு 18 மணி நேரம்தொடர் பிரச்சாரம் இருக்கும். அந்த அனுபவம் இப்போது எனக்கு நல்லவிதத்தில் கைகொடுக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன், முருகன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், குஷ்பு என பலரும், தேர்தல் களத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நல்ல திறமைசாலிகளை பாஜக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
‘நீட்’ தேர்வு உள்ளிட்ட விஷயங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளதே?
1970-க்கு பிறகு, கர்நாடகாவில் இருந்து நானும், பிரபுவும் தமிழகத்தில் கல்லூரிக்கு படிக்க வந்தபோது, இங்கு கல்வித்தரம் பின் தங்கி இருந்தது. ஆனால் இன்றைக்கு கல்வித்தரம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அப்போதுதான், அனைத்து துறைகளிலும் நாம் சாதிக்க முடியும். நம் மாநிலத்தவர் பிற மாநிலத்தவர்களுடன் போட்டிபோட, ‘நீட்’ போன்ற தேர்வுகள் அவசியமான ஒன்று. தேசிய அளவில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த இது உதவும். தவறான வாக்குறுதி, பிரச்சாரங்களை எதிர்கட்சிகள் முன்னெடுத்துள்ளன. ’பூச்சாண்டி வருகிறான் சாப்பிடு’ என்று குழந்தையை சாப்பிட வைப்பது போன்று, இன்றைக்கு தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர் எதிர்கட்சிகள். தவறான வாக்குறுதிகளை மட்டும் மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். பிரதமரின் நலத்திட்டங்கள், முதல்வர் பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து நான் பிரச்சாரம் செய்கிறேன்.
காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து பாஜகவுக்கு வந்துள்ள நடிகர் சிவாஜியின் மகன் என்ற விமர்சனம்?
காங்கிரஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தானே அன்றைக்கு அப்பா வெளியே வந்தார். தேசியம், தெய்வீகம் மற்றும் ஆன்மீகம் இந்த மூன்றும் பிரதமர் மோடியை தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவேதான், அவர் சிறந்த பிரதமராக உள்ளார். தேசம் தான் எங்களுக்கு முக்கியம். பிரதமருக்காகவும், கட்சிக்காகவும் வேலை செய்கிறோம்.
கோவையில் உத்தரபிரதேச மாநில முதல்வர் வருகையின் போது நடந்த வன்முறை?
இந்த கலாச்சாரம் எங்கிருந்து வந்தது? இதற்கு முன்பு குடுமி, பூணூல் அறுத்தார்கள். சென்னையில் மார்வாடிகளை அடித்து பாடையில் ஏற்றினீர்கள். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, மலையாளிகளின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றைக்கு கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு, யாரும் கல்லைத் தூக்கி எறியக்கூடாது.
சிவாஜியிடம் நெருக்கமானவரான நடிகர் கமல்ஹாசனின் தேர்தல் பயணம்?
அவர் அவருடைய சித்தாந்தத்துக்காக வேலை செய்கிறார். சித்தாந்தம் வேறு, நட்பு வேறு. அவரவர் அரசியல் தளத்தில் வேலை செய்கிறோம்.
பாஜகவில் அடுத்ததாக தேர்தல் அரசியலில் நிற்பீர்களா?
இப்போது தான் கட்சியில் சேர்ந்துள்ளேன். இதனை காலம் தான் முடிவு செய்யும். நான் அதை பற்றி யோசிக்கவில்லை. எனக்கு அந்த சிந்தனை தற்போது இல்லை. மாநில அரசு தனியாக எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசுடன் இணைந்து தான் செயல்பட முடியும். எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். பிரதமரின் கரத்தை வலுப்படுத்தினால் நாடு செழிப்பாகும்; வளமாகும். மக்கள் தான் மோடியை தேர்ந்தெடுத்தார்கள். அவர் எப்படி பாசிஸ்ட் ஆக இருக்க முடியும்? அரசியலில் தனிப்பட்ட தாக்குதல்களும், விமர்சனங்களும் அதிகரித்து வருகிறது. வேதனை அளிக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago