தி.மலை திமுக எம்.பி. வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  

By ஆர்.தினேஷ் குமார்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பண பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மக்களவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் சி.என்.அண்ணாதுரை. இவர், திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். மேலும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களில் முக்கியமானவர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து பண பட்டுவாடா நடைபெறுவதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று (ஏப். 02) காலை சோதனையிட்டதில், பணம் ஏதும் சிக்காததால், அவர்கள் திரும்பினர்.

இதைத்தொடர்ந்து, வருமான வரித்துறையினர் அதிரடியாக அவரது வீட்டில் நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த பணியில் சுமார் 8 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்த நாளில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் கிரானைட் குவாரி உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 25-ம் தேதி வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அதில், பணம் ஏதும் கைப்பற்றவில்லை என எ.வ.வேலு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE