தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளநிலையில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆனால்,ஏற்கெனவே கடந்த தேர்தல்களில் அளிக்கப்பட்ட பலமுக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் வாக்குறுதிகளாகவே நீடிக்கின்றன. அவை இந்தமுறையாவது நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் இறுதிக்கட்ட வாக்குவேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். ஆனால், கடந்த தேர்தல்களில் அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விவிடி சந்திப்பு மேம்பாலம்
இதில் முக்கியமானது விவிடி சந்திப்புமேம்பாலம். தூத்துக்குடி நகரில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த விவிடி சந்திப்பில், வாகனங்கள் நீண்ட நேரம், நீண்ட தொலைவுக்கு காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இதனால் மக்கள் பெரும் துன்பங்களை நாள்தோறும் அனுபவித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த சிக்னலை தாண்டி வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் விவிடி சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என கடந்த 2016 தேர்தலின் போது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், மேம்பாலம் அமைப்பதற்கான பணி எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
தூத்துக்குடி நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என ஜெயலலிதா கடந்த தேர்தலில் அறிவித்திருந்தார். தூத்துக்குடி துறைமுக புறவழிச்சாலையில் மீன்வளக் கல்லூரிக்கு எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டும், ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைக்கப்படவில்லை. தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1 மற்றும் 2-ம் ரயில்வே கேட்
தூத்துக்குடி நகரின் போக்குவரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கும் 1-ம் கேட் மற்றும் 2-ம் கேட் பகுதியில் சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் கடந்த தேர்தலின் போது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே வாக்குறுதி அளித்திருந்தன. ஆனால், இதற்கான எந்த பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த இரு ரயில்வே கேட்களும் தினமும்பல முறை மூடப்படுவதால் கடுமையானபோக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த கோரிக்கை வெறும் வாக்குறுதியாகவே தொடர்கிறது.
தூத்துக்குடி- மணியாச்சி சாலை
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தை கடந்து சென்னை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பல ரயில்கள் சென்று வருகின்றன. இந்த ரயில்களை தூத்துக்குடி பகுதிமக்கள் எளிதில் பிடிக்க வசதியாக தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிவரை நேரடியாக தனிசாலை அமைக்கப்படும் எனவும் கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அறிவித்தார்.
தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி வரை சாலை அமைப்பதற்காக நிலம்கையகப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டது. ஆனால், மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேபோன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 12 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையவில்லை.
இவ்வாறு தூத்துக்குடியில் ஏற்கெனவே அரசியல் கட்சியினரால் அளிக்கப்பட்ட பல தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதே வாக்குறுதிகளை இந்த தேர்தலிலும் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளனர். எனவே, இம்முறையாவது இந்த வாக்குறுதிகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு தூத்துக்குடி தொகுதி மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago